திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவிட் பெருந்தொற்று தடுப்பு
நடவடிக்கையாக பௌர்ணமி மற்றும் தீபத் திருவிழா நாட்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கிரிவலம் செல்வதற்கான தடை நீடித்தது. இதனால் பக்தர்கள் வேதனையில் இருந்து வந்தனர். கிரிவலம் செல்வதற்கான தடையை நீக்க வேண்டும் என இந்து அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தது. சென்ற வருடம் நடைபெற்ற கார்த்திகை தீப திருவிழாவின் போது கிரிவலம் செல்ல பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும் அதன் பிறகு பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை நீடித்தது. இந்நிலையில் இந்த மாதம் அதற்கான தடையை நீக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பதாவது,
கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த மாத பௌர்ணமி
தினங்களான 17.03.2022 மற்றும் 18.03.2022 ஆகிய தினங்களில்
கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்ட கோவிட் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி
கட்டாயம் முக்கவசம் அணிந்து வர வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.