வந்தவாசி அருகே சாலையோரம் பிரபல கம்பெனியின் காலாவதியான தின்பண்டங்கள் கொட்டிக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலர்¸ கலரான பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை விரும்பி உண்கின்றனர். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இந்த தின் பண்டங்கள் கெடாமல் இருக்க ரசாயனங்கள் கலந்து விற்க்கப்படுவதாக கூறப்பட்டாலும் இதன் விற்பனையை தடுத்து நிறுத்த முடியவில்லை. சில கடைகளில் காலாவதியான தின்பண்டங்கள் விற்பனை செய்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
வந்தவாசியிலிருந்து செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையின் ஓரமாக பல கடைகள் உள்ளன. இங்கு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள் விற்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நெடுஞ்சாலை ஓரமாக குவியல்¸ குவியலாக ஹல்டிராம்ஸ் என்ற பிரபல கம்பெனியின்(நாக்பூர்¸ புது தில்லி¸ குர்கான்¸ ருத்ராபூர் மற்றும் நொய்டா போன்ற பல்வேறு இடங்களில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ள ஹல்டிராம்ஸ் நிறுவனத்தின் சோன்பப்டி புகழ் பெற்றதாகும்) இனிப்பு¸ கார வகைகள் மற்றும் நொறுக்குத் தீனி அடங்கிய பாக்கெட்டுகள் கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில கம்பெனிகளின் பாக்கெட்டுகளும் கொட்டப்பட்டிருந்தது. அப்பகுதியில் உள்ளவர்கள் பாக்கெட்டுகளை எடுத்து பார்த்த போது அவை தேதி முடிந்து காலாவதியானது தெரியவந்தது.
இந்த பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு சில நாட்கள் ஆகியும் அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதி வழியாக பள்ளி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் மாணவ-மாணவியர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துபவர்கள் ஆர்வமிகுதியால் அதை எடுத்து உண்பதன் மூலம் உடல் நலம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
எனவே காலாவதியான அந்த தின்பண்ட பாக்கெட்டுகளை அதிகாரிகள் உடனடியாக அழிக்க வேண்டும் எனவும்¸ மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பவர்கள் மீதும்¸ போதை பொருட்களை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் காலாவதியான தின்பண்டங்களை விற்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது பொதுவாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் அதிகப்பட்சம் 6 மாதங்கள் வரை மட்டுமே கெடாமல் இருக்கும். வந்தவாசி அருகே காலாவதி தேதி முடிந்து 1 வருடம் ஆகியும் இருப்பு வைக்கப்பட்டு அதன்பிறகு கொட்டப்பட்டிருப்பது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது என்றார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் காலாவதியான தின்பண்டங்களை கொட்டியது யார்? சோதனைக்கு பயந்து அவற்றை கொட்டினார்களா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.