![]() |
கலைவாணன் |
திருவண்ணாமலை அருகே பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம உதவியாளர் மற்றும் வி.ஏ.ஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கலைவாணன். இவர் திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
திருவண்ணாமலை வட்டம் கொளக்கரவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சஙகர்(வயது.49). விவசாயி. சங்கரின் மகன் ரஞ்சித்குமார். சங்கரின் தந்தை சுந்தரேசன். சுந்தரேசன் தனது பேரன் ரஞ்சித்குமாருக்கு நிலத்தை தான செட்டில்மெண்ட் செய்து தந்தாராம். இதனால் ரஞ்சித்குமாரின் பெயருக்கு சொத்தை பட்டா பெயர் மாற்றம் செய்ய அவரது தந்தை சங்கர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்திருந்தார்.
இதன் பேரில் கடந்த ஜனவரி மாதம் வி.ஏ.ஓ கலைவாணன்¸ சங்கரை அழைத்து பட்டா பெயர் மாற்றம் செய்திட வேண்டும் என்றால் ரூ.6 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் இவ்வளவு பணத்தை தன்னால் தர முடியாது என சொல்லி விட்டாராம். இதையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் லஞ்சம் தர விரும்பாத சங்கர் இதுபற்றி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசிடம் புகார் செய்தார்.
இதன் பேரில் வி.ஏ.ஓவை கையுங்களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். போலீசார் கொடுத்த ஐடியாவின் படி கலைவாணனை¸ சங்கர் செல்போனின் தொடர்பு கொண்டு லஞ்சம் ரூ.5500 தருவதாக தெரிவித்தார். அதற்கு கலைவாணன் பணத்தை தனது அலுவலக உதவியாளரான அண்ணாமலையிடம் தரும்படி கூறினாராம். இந்த உரையாடலை சங்கர் தனது போனில் பதிவு செய்து கொண்டார். இதையடுத்து அண்ணாமலையை சங்கர் தொடர்பு கொண்ட போது அவர் நாயுடுமங்கலத்தில் உள்ள தனது நிலத்தில் இருப்பதாகவும்¸ அங்கு வந்து பணத்தை தரும்படி சொன்னாராம்.
![]() |
அண்ணாமலை |
உடனே போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சங்கரிடம் கொடுத்து அனுப்பி அவரை தொடர்ந்து சென்றனர். நிலத்தில் நின்று கொண்டிருந்த கிராம உதவியாளர் அண்ணாமலையிடம்¸ சங்கர் ரசாயனம் தடவிய பணத்தை தந்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன்¸ இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் அண்ணாமலையை¸ கையுங்களவுமாக பிடித்து கைது செய்து கருந்துவாம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்த வி.ஏ.ஓ கலைவாணனனையும் கைது செய்தனர்.
வி.ஏ.ஓவை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்த சம்பவம்¸ அப்பகுதியில் பரபரப்பையும்¸ லஞ்ச அதிகாரிகளுக்கு திகிலையும் ஏற்படுத்தியுள்ளது.