தனியார் மருத்துவமனைகள்,விபத்தில் சிக்கியவர்களுககு முதலில் சிகிச்சை அளிப்பதற்கு பதில் பணம் இருக்கிறதா? என்றுதான் பார்க்கின்றனர் என எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை ஊரட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சக்கரத்தாமடை கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் கப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
முகாமிற்கு கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஆர்.செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு முகாமினை துவக்கிவைத்து 25 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்¸ குழந்தைகளுக்கான காப்பக பெட்டகம் மற்றும் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது¸
திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு¸ திருவண்ணாமலை என 2 மருத்துவ வட்டாரங்கள் அமைய பெற்றுள்ளன. திருவண்ணாமலை மருத்துவ வட்டாரத்தில் 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும்¸ நகரபகுதியில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்களும்¸ 253 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும்¸ செய்யாறு மருத்துவ வட்டாரத்தில் 41 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும்¸ நகரபகுதியில் 3 ஆரம்ப சுகாதார நிலையங்களும்¸ 157 துணை ஆரம்ப சுகாதார நிலையங்களும் அமையப் பெற்றுள்ளன.
திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை¸ மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை¸ 9 அரசு மருத்துவமனைகள்¸ 99 ஆரம்ப சுகாதார நிலையங்களும் (நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உட்பட)¸ 410 துணை சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட 18 வட்டாரங்களில்¸ வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 54 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு இதுவரை 48 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 13¸493 ஆண்கள்¸ 17¸846 பெண்கள்¸ 4¸477 குழந்தைகள் என மொத்தம் 35¸816 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 590 நபர்கள் மேல்சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டு 159 நபர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சையும்¸ 40 குழந்தைகளுக்கு சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சையும்¸ 14 குழந்தைகளுக்கு சென்னை சவிதா மருத்துவமனையில் உதடு பிளவு சரிசெய்யப்பட்டும்¸ 6 குழந்தைகளுக்கு சென்னை ராஜீவகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காதுகேளாமை குறைபாடு சரிசெய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே பொது மருத்துவத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் பொதுசுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம்¸ நம்மை காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட்டு விட்டு பாக்கெட்டில் பணம் இருக்கிறதா என்றுதான் முதலில் தனியார் மருத்துவமனைகள் பார்ப்பார்கள். ரத்தம் சொட்ட¸ சொட்ட அழைத்து வரப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட்டு விட்டு எவ்வளவு பணம் உள்ளது என கேள்வி கேட்பார்கள். இதனால்தான் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட¸ விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதல்வர் கொண்டு வந்திருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி¸ சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி பெ.சு.தி.சரவணன் நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன்¸ திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி¸ துணைத் தலைவர் த.ரமணன்¸ மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் இல.சரவணன்¸ ஞான சௌந்தரி மாரிமுத்து¸ தலையாம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டாள் சீத்தாராமன்¸ துணைத் தலைவர் வீரம்மாள் காசிவேல்¸ பொறியாளர் சீத்தாசீனுவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.