அரசு நிகழ்ச்சிகளில் அமைச்சர் மகன் கம்பன் முதன்மை விருந்தினராக பங்கேற்பது குறித்து அதிமுக வாய்திறக்காத நிலையில் பாமக எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு¸ திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். புதியதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி¸ மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழக அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படாததால் எ.வ.வேலு¸ திருவண்ணாமலை மட்டுமன்றி கள்ளக்குறிச்சி¸ திருப்பத்தூர் மாவட்ட அமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கவனிதது வருகிறார்.
இவரது மகன் எ.வ.வே.கம்பன்¸ அருணை மருத்துவ கல்லூரியின் இயக்குநராகவும்¸ திமுகவில் மாநில மருத்துவ அணியின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவில் சீனியர்களை ஓரம் கட்டி விட்டு இவரை முன்னிலைப்படுத்தி வருவது குறித்து திமுகவில் சீனியரான மாவட்ட துணை செயலாளராக இருந்த சாவல்பூண்டி சுந்தரேசன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. பிறகு அவர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். கம்பனை முன்னிலை படுத்துவது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையும் பேசியிருக்கிறார். திருவண்ணாமலைக்கு பிப்ரவரி மாதம் அவர் வந்த போது¸ கோபாலபுரத்து குடும்ப ஆட்சி அச்சு அசல்¸ ஜெராக்ஸ் மாதிரி திருவண்ணாமலையிலும் நடந்து வருகிறது. ஒரு குடும்பத்தின் கீழ் மக்கள் அடிமையாக இருக்க கூடாது¸ இருக்கவும் விடமாட்டோம் என்றார்.
இந்நிலையில் திருவண்ணாமலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் எ.வ.வேலுவின் மகனும்¸ மாநில மருத்துவ அணியின் துணைத் தலைவருமான எ.வ.வே.கம்பன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலை பளு காரணமாக உள்கட்சி விவகாரங்களை பார்த்து கொள்ளவும்¸ தான் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் கம்பனை வைத்து அரசு நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ளவும் எ.வ.வேலு¸ தலையசைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ரேஷன் கடை திறப்பு |
முதன்முதலாக திருவண்ணாமலை கீழ்நாத்தூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையை எ.வ.வே.கம்பன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். அதன் பிறகு மக்கள் பிரநிதியாகவும்¸ அரசு மற்றும் அதன் சார்பு அமைப்புகளில் பொறுப்புகளில் இல்லாத நிலையிலும்¸ மாநில தடகள சங்க துணைத் தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் எ.வ.வே.கம்பன் சீப்-கெஸ்ட்டாக பங்கேற்று வருகிறார்.
உலகப்பாடியில் ஆய்வு |
திருவண்ணாமலை நகராட்சி சார்பில்¸ சன்னதி தெருவில் பழைய நகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் பள்ளியையும்¸ திருவண்ணாமலைக்கு குடிநீர் வழங்கும் உலகப்பாடி நீரேற்று நிலையத்தையும் கம்பன் பார்வையிட்டார்.மாவட்ட அறங்காவலர் குழு பதவியேற்பு விழாவில் எ.வ.வே.கம்பனே சிறப்பு விருந்தினர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் |
கட்டிடம் கட்டும் பணி ஆய்வு |
சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாரத பிரதமரின் நிதியுதவி திட்டத்தின்கீழ் 69 ஊராட்சிகளை சேர்ந்த 300 பயனாளிகளுக்கு ரூ.8.25 கோடி மதிப்பிட்டில் வீடு வழங்குவதற்கான பணி ஆணைகளை வழங்கினார். அதன் பிறகு வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுவதை பார்வையிட்டார். மேற்கண்ட நிகழ்ச்சிகளின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப் உடன் இருந்தார்.
இன்று திருவண்ணாமலை நகராட்சியில் ஒப்பந்தக்குழு உறுப்பினர்கள்¸ நியமன குழு உறுப்பினர்¸ வரி விதிப்பு முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் எ.வ.வே.கம்பன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.
நகராட்சி அலுவலகத்தில்… |
மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவர் ஆக்டிங் நகரமன்ற தலைவராக செயல்படுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் திருவண்ணாமலை நகரமன்றத்தின் முதல் கூட்டத்தில் இப்பிரச்சனையை அதிமுக உறுப்பினர்கள் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை. அதே சமயம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கம்பனை அழைத்து விழா நடத்தப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள ஒன்றிய கவுன்சிலரும்¸ பா.ம.க மாவட்ட செயலாளருமான பக்தவச்சலம் வரவிருக்கிற ஒன்றிய குழு கூட்டத்தில் இப்பிரச்சனையை எழுப்ப உள்ளதாக தெரிவித்தார்.
சபாநாயகர்¸ துணை சபாநாயகருக்கு அடுத்தபடியாகத்தான் அமைச்சர்கள் வருவார்கள். இதெல்லாம் சடடமன்றத்தில்தான். திருவண்ணாமலையில் நிலைமை தலைகீழ். துணை சபாநாயகருக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. அமைச்சர் வரமுடியாத சூழ்நிலையில் துணை சபாநாயகரைத்தான் அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டும். ஆனால் வாரிசு அரசியலில் அவர் மறைக்கப்பட்டு விட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.