திருவண்ணாமலையில் என்ஜீனியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு
திருவண்ணாமலை பட்டேல் அப்துல் ரசாக் தெருவைச் சேர்ந்தவர் முகமது (வயது 27). தந்தை பெயர் ஜாஹீர் அஹமது. சிவில் என்ஜினியரிங் படித்து உள்ள முகமது¸ பெரிய மசூதி அருகில் துணிக்கடை வைத்திருந்தார்.
அண்ணாநகரைச் சேர்ந்த சிலருக்கும்¸ இந்திரா நகரைச் சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நல்லவன்பாளையம் பகுதியிலுள்ள ரிங் ரோடு அருகில் முகம்மதும் அவரது நண்பர்களும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு திருவண்ணாமலை அண்ணா நகரைச் சேர்ந்த முன்னா (28) என்பவர் அவரது நண்பருடன் வந்து முகமது தரப்பினரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த தகராறு முற்றி அன்றிரவு அண்ணாநகர் பகுதியில் ஏற்பட்ட மோதலில் முன்னா உள்பட 5 பேர் சேர்ந்து முகம்மதுவை கத்தியால் குத்திவிட்டு ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது . இதில் முகமதுக்கு உடலில் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. முகமது சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த முகமதுவின் உறவினர்கள்¸ நண்பர்கள் என 150க்கும் மேற்பட்டவர்கள் இன்று இரவு திருவண்ணாமலை தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
தகவல் கிடைத்ததும் அங்கு வந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி¸ துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றப் பின்னணி உள்ளவர்கள் மீதும்¸ கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும் போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னாவை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட முகமதுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கொலை சம்பவத்தினால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.