திருவண்ணாமலையில் நடைபெற்ற ரோடு ரேஸ் சைக்கிளிங் போட்டியில் சிவகங்கை மாணவர் முதல் பரிசை பெற்றார்.
உடல் ஆரோக்கியம் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் திறனை மேம்படுத்த முதன் முதலில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து துவங்கிய இந்த மாநில அளவிலான போட்டியில் 1318 பேர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலை சந்திப்பு அருகில் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சைக்கிளிங் சங்கம் இணைந்து நடத்திய மாவட்டங்களுக்கிடையேயான மாநில அளவிலான ரோடு ரேஸ் சைக்கிளிங் சேம்பியன்ஷிப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பிறகு அவரும்¸ பயிற்சி உதவி ஆட்சியர் கட்டா ரவி தேஜாவும் சிறிது தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.
உடல் ஆரோக்கியத்துக்காகவும் கிராமப்புற இளைஞர்கள் திறனை மேம்படுத்துவதற்காகவும் நடைபெற்ற இப்போட்டியில் 23 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 226 போட்டியாளர்களும்¸ 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 177 போட்டியாளர்களும்¸ 16 வயதிற்குட்பட்டோருக்கான மாணவர் மற்றும் மாணவிகள் பிரிவில் 246 போட்டியாளர்களும்¸ 14 வயதிற்குட்பட்டோருக்கான மாணவர் மற்றும் மாணவிகள் பிரிவில் 165 போட்டியாளர்களும்¸ 10 வயதிற்குட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில் 218 போட்டியாளர்களும்¸ 25 முதுல் 49 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 137 போட்டியாளர்களும்¸ 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் 51 போட்டியாளர்களும்¸ மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான பிரிவில் 24 போட்டியாளர்களும்¸ மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பிரிவில் 54 போட்டியாளர்களும் மற்றும் சிறப்பு பங்கேற்பாளர்கள் பிரிவில் 20 போட்டியாளர்களும் என மொத்தம் மாநில அளவில் 1318 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
இவர்களில் 815 போட்டியாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் 503 போட்டியாளர்கள் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
14 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவில் சிவகங்கையைச் சேர்ந்த நிதின் ஜெனவன் கதிர் முதல் பரிசையும்¸ விருதுநகரைச் சேர்ந்த எஸ்.மாதேஸ்வரன் 2வது பரிசையும்¸ அதே ஊரைச் சேர்ந்த எஸ்.சுஜன் 3வது பரிசையும்¸ ஈரோட்டைச் சேர்ந்த பி.நவநீதன் 4வது பரிசையும்¸ தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெய்சன் 5வது பரிசையும் பெற்றனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். இதே போல் மற்ற பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும்¸ கேடயமும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ தமிழ்நாடு சைக்கிளிங் சங்க பொதுச்செயலாளர் ஏ.பி.சுப்பிரமணிராஜா¸ திருவண்ணாமலை மாவட்ட சைக்கிளிங் சங்க தலைவர் டாக்டர். பிரவின் ஸ்ரீதரன்¸ திருவண்ணாமலை மாவட்ட சைக்கிளிங் சங்க சேர்மன் அரவிந்தகுமார்¸ மாவட்ட சைக்கிளிங் சங்க செயலாளர் என்.சுரேஷ்குமார்¸ மாவட்ட சைக்கிளிங் சங்க பொருளாளர் ஆர். கார்த்திகேயன்¸ தமிழ்நாடு சைக்கிளிங் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.முத்துசாமி¸ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் பெரியகருப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
முடிவில் ஒருங்கிணைப்பாளர் எம்.மனோகரன் நன்றி கூறினார்.