சித்ரா பவுர்ணமியை முடிந்ததை தொடர்ந்து திருவண்ணாமலை நகரம்¸ கிரிவலப்பாதையில் 200 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
கிரிவலப்பாதையில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
20 லட்சம் பேர் கிரிவலம் வந்த போதும் சிறு சம்பவம் கூட நடைபெறவில்லை
போக்குவரத்து துறை¸ காவல்துறைக்கு பாராட்டு
சிறப்பு ரயில் விடாததற்கு மத்திய அரசுதான் காரணம் என பேட்டி
திருவண்ணாமலையில் 2 வருடங்களுக்கு பிறகு சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டதால் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பொருட்களால் ஏற்பட்ட கழிவுகள்¸ அன்னதானம் வழங்குதல் மற்றும் கடைகளினால் ஏற்பட்ட கழிவுகள் ஆகியவற்றால் திருவண்ணாமலை நகரம் மற்றும் 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப்பாதையில் குப்பைகள் தேங்கின. இவற்றை இன்று அகற்றும் பணியில் திருவண்ணாமலை மட்டுமன்றி வெளியூரிலிருந்து வரவழைக்கப்பட்ட நகராட்சி¸ ஊராட்சிகளின் துப்புரவு பணியாளர்கள் நூற்றுக்கணக்கான பேர் ஈடுபட்டனர்.
இப்பணிகளை பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (17.04.2022) நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது¸
இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் அனுமதி பெற்று கிரிவலம் செல்லலாம் என அறிவித்ததன் காரணமாக சுமார் 20 லட்சம் பேர் நேற்றைய தினம் திருவண்ணாமலை கிரிவப்பாதையில் கிரிவலம் சென்றனர். இந்த ஆன்மீக நகரத்திற்கு கிரிவலம் செல்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிந்த காரணத்தினால் அவர் நேரிடையாக துறை செயலாளர் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு குறிப்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கெல்லாம் அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து அரசு துறைகளை ஒன்றாக இணைத்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்தப்பட்டதன் விளைவாக 20 லட்சம்; பக்தர்கள் வருகைத் தந்த போதிலும் எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் கிரிவலம் சென்று வந்தனர். குறிப்பாக போக்குவரத்து துறையை பொருத்த வரையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்¸ பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக சிறப்பான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கத்தின் சார்பில் நாங்கள் மகிழ்ச்சி அடைவது¸ இந்த ஆன்மீக நகரத்திற்கு கிரிவலம் செல்வதற்காக 20 லட்சத்திற்கு மேலான பக்தர்கள் வருகைத்தந்த போதிலும் ஒரு சிறிய சம்பவமும் நடைபெறாமல் அவர்கள் பாதுகாப்பாக அவரவர் ஊர்களுக்கு சென்றிருக்கின்றனர். மேலும் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த காவல் துறையினருக்கும்¸ எந்வித குறைபாடுகளுமின்றி பாதுகாப்பாக பேருந்துகளை இயக்கி பக்தர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பிய போக்குவரத்து துறைக்கும் தமிழக அரசின் சார்பாகவும்¸ மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சித்ரா பவுர்ணமிக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது என்பது ஒன்றிய அரசின் சம்மந்தப்பட்டது. இருந்தாலும் கூட 2 வருடத்திற்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அதிக கூட்டம் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை முன்னெச்சரிக்கையாக கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவர்கள் (ரயில்வே) விதி என்னவோ அதன்படி செய்துள்ளனர். இனி வரும் காலங்களில் கூடுதல் ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.
சாலையின் நடுவே பக்தர்கள் கற்பூரங்களை ஏற்றுவதால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக உள்ளது. இனி வரும் பௌர்ணமி நாட்களில் இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நி;ர்வாகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்¸ திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை¸ செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார்¸ மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி¸ நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல்¸ மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன்¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம்¸ திருவண்ணாமலை நகரமன்றத் துணைத்தலைவர் ராஜாங்கம் மற்றும் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
சித்ரா பௌர்ணமி முடிந்ததை தொடர்ந்து திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் 200 டன் குப்பைகள் அகற்றப்பட்டு ஈசான்ய குப்பை கிடங்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.