செங்கம் அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அமாவாசை பூஜைக்காக பொருட்கள் வாங்க சென்ற 3 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு¸
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்¸ மேக்ஸி கேப் வேனில் இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு மேல்மலையனூர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். இதே போல் செங்கம் தொரப்பாடி காலனியைச் சேர்ந்த 3 பேர்¸ அமாவாசை பூஜைக்காக பொருட்கள் வாங்க செங்கத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
இன்று பகல் அம்மாபாளையம் அருகே மேல்மலையனூர் சென்ற வேன்¸ அந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பிரபு(வயது. 35)¸ பின்னால் உட்கார்ந்து சென்ற மணி(45)¸ பரமசிவம்(50) ஆகிய 3 பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். படுகாயங்களுடன் 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக செத்தனர்.
மோதிய வேகத்தில் வேன் ரோட்டின் ஓரம் ஒரு பக்கமாக கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம செய்த 7 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களது பெயர்¸ விவரம் வருமாறு¸
1) விஜயகுமார்(40)¸ பாலகோடு¸ தருமபுரி தாலுகா 2) விஜயகுமாரின் மனைவி கிருஷ்ணவேணி(34) மேல் கரியமங்கலம்¸ செங்கம் தாலுகா. 3) கோவிந்தராஜின் மனைவி கவிதா(30) மத்தூர்¸ போச்சம்பள்ளி தாலுகா. 4) திருப்பதியின் மகன் சந்துரு(10) காரடியாடி கிராமம்¸ கிருஷ்ணகிரி மாவட்டம். 5) நரசிம்மன்(40)¸ பெரியமுத்தூர்¸ கிருஷ்ணகிரி மாவட்டம். 6) தாமோதரன்(32)¸ காவேரிபட்டிணம்¸ கிருஷ்ணகிரி மாவட்டம். 7) திருப்பதியின் மனைவி ஜெயந்தி(29) காரடியாடி கிராமம்¸ கிருஷ்ணகிரி மாவட்டம்.
இறந்த 3 பேரில் பரமசிவம் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். மற்ற 2 பேரும் விவசாய கூலி வேலை செய்து வந்தனர். ரோட்டில் கிடந்த 3 பேரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. பாச்சல் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜே.சி.பி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த வேன் நிமிர்த்தப்பட்டது.
இந்த விபத்து குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமாவாசைக்கு பொருட்களை வாங்க சென்றவர்கள் விபத்தில் பலியானது அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.