8 வழிச்சாலை எதற்கு?
எடப்பாடி பழனிச்சாமி நீண்ட விளக்கம்
நீதிமன்றத்தில் உள்ள சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்ட வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இதைக் கண்டித்து 8 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்¸ கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்¸ தீப்பந்தம் ஏற்றி போராட்டம்¸ திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை நடைபயணம்¸ சாமியிடம் மனு அளித்து முறையீடு என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்¸
“8 வழிசாலை என்பது மத்திய அரசின் திட்டம். நாடு வளர்ச்சி அடைய இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. வாகனங்களின் எண்ணிக்கை 2001ல் இருந்ததை விட 305 சதவீதம் உயர்த்திருக்கிறது. எனவே சாலையை விரிவுபடுத்த வேண்டுமா?¸ வேண்டாமா? அதன் அடிப்படையில் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதான் மாநில அரசின் வேலை. தொழிற்சாலைகள் அதிகரிக்க உட்கட்டமைப்பு தேவை. இந்த 8 வழிசாலை சேலத்திற்குதானே போகிறது என நினைக்க கூடாது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாகத்தான் போகிறது. நீங்களும்தான் பயனடைகிறீர்கள்.
திமுக ஆட்சியிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சுங்கசாவடி அமைத்து தேசிய நெடுஞ்சாலைக்காக சுமார் 894 கிலோ மீட்டர் நீள சாலைகளை அப்போது எடுத்தார்கள். அப்போது விவசாயிகள் பாதிக்கப்படவில்லை¸ இப்போதுதான் பாதிக்கப்படுகிறார்கள் என எதிர்கட்சியினர் கூறுகின்றனர். விபத்தில்லா பயணம்¸ குறைந்த நேரத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும்¸ சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் இந்த அடிப்படையில் மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இச்சாலை சேலம்¸ ஈரோடு¸ திருப்பூர்¸ கோவை வழியாக கொச்சினுக்கும்¸ இன்னொரு புறம் நாமக்கல்¸ திருச்சி வழியாக தஞ்சாவூருக்கும்¸ மற்றொரு புறம் மதுரை¸ கன்னியாகுமரிக்கும் செல்கிறது. தொழிற்சாலை நிறைந்த பகுதிக்கு தங்கு தடையிலாமல்¸ போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கனரக வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில்தான் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது மிகப்பெரிய திட்டம். விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதன்படி மத்திய அரசு செயல்படும்” என நீண்ட விளக்கம் அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இதனிடையே செங்கம் அடுத்த மண்மலை பகுதியில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் விவசாயிகள் சென்னை – சேலம் எட்டுவழிச்சாலைக்கும்¸முதல்வர் வருகைக்கும்¸ எதிர்ப்பு தெரிவித்து கையில் கண்டன பதாதை மற்றும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.