சித்ரா பவுர்ணமி தூய்மை பணியில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் கால்வாயில் இறங்கி குப்பைகளை அள்ளினார்.
சித்ரா பவுர்ணமி மாபெரும் தூய்மை பணி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்தை போல் பக்தர்கள் கிரிவலம் வரும் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வருகிற 16ந் தேதி நடைபெறுகிறது. வருகிற 15ந் தேதி பின்னிரவு 2.32மணியிலிருந்து 17ந் தேதி பின்னிரவு 1.17 வரை பவுர்ணமி திதி இருப்பதால் 16ந் தேதி இரவு கிரிவலத்துக்கு உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள். 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கலெக்டர் துவக்கி வைத்தார்
அதன் ஒரு பகுதியாக இன்று மாபெரும் தூய்மை பணி நடைபெற்றது. அண்ணாமலையார் கோயில் முன்பிருந்து இப்பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் துவக்கி வைத்தார். அப்போது அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும்¸ மாநில தடகள சங்க துணைத் தலைவருமான எ.வ.வே.கம்பன் உடனிருந்தார்.
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது¸
வருகின்ற 15.04.2022 வெள்ளிக்கிழமை மற்றும் 16.04.2022 சனிக்கிழமை சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவுரையின்படி இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 கி.மீ தூரத்தில் இருக்கின்ற கிரிவலபாதையை தூய்மைப்படுத்துகின்ற பணி நடைபெற்று வருகின்றது.
2000 பணியாளர்கள்
1 கிலோ மீட்டருக்கு 100 – 120 பணியாளர்கள் வீதம் 16 கிலோ மீட்டருக்கு 2000 பணியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைத்து¸ இந்த பணியை செயல்படுத்தி வருகின்றோம். இந்த குழுக்களில் அரசு தூய்மை பணியாளர்களை கொண்டும்¸ தூய்மை அருணை¸ ரீகன் போக் தொண்டு நிறுவனம்¸ இளம் தளிர் இயக்கம் மற்றும் தமிழ் இளைஞர்கள் இயக்கம்¸ மலை நகர் நண்பர்கள்¸ இறைத் துளிகள் இயக்கம்¸ நீர் துளிகள் இயக்கம்¸ அரசு கலைஞர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி¸ சண்முகா கலை கல்லூரி¸ அருணை கல்லூரிகள் குழுமம்¸ சாந்திமலை டிரஸ்ட் போன்ற தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் மூலமாகவும் கிரிவல பாதையை போர்கால அடிப்படையில் துய்மை படுத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள்
பொதுமக்கள்¸ கடை உரிமையாளர்கள்¸ பக்தர்கள் அனைவரும் தடைசெய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தடை செய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்தினால் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பொதுமக்கள் ஆங்காங்கே கண்காணிக்கப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கையும்¸ அபராதமும் விதிக்கப்படும். சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கடைகளிலும்¸ பொதுமக்களிடமும் தடைசெய்யப்பட்ட நெகிழி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். “மீண்டும் மஞ்சப்பை” குறித்த விழிப்புணர்வு¸ அதன் முக்கியத்துவம் குறித்து¸ பொதுமக்கள்¸ பக்தர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தற்காலிக பேருந்து நிலையங்கள்
சித்ரா பௌர்ணமி அன்று 25 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற 25 இலட்சம் பக்தர்களும் சிரமமில்லாமல் செல்வதற்கு 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து¸ கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாம்¸ 108 ஆம்புலன்ஸ் வசதி¸ தீயணைப்பு கருவிகள்¸ 24 மணிநேரமும் மின்சார வசதி¸ மருத்துவசேவை¸ குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளும் ஏற்பாடு செய்யப்பபட்டு¸ பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதற்கு ஏதுவாக 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு¸ இதுவரை 70 நிறுவனங்கள் அன்னதானத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து¸ அன்னதானம் அளிக்க விரும்புபவர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக 14.04.2022 அன்று வரை விண்ணப்பித்து அனுமதி ஆணையினை பெற்றுக்கொள்ளலாம்.
சிறப்பு ரயில்- பேருந்து வசதி
வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வருவதற்கு 6¸000 பேருந்துகள் வசதியும்¸ ரயில் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன் குமார் ரெட்டி¸ கூடுதல் ஆட்சியர் மு¸பிரதாப்¸ மாவட்ட வன அலுவலர் அருண்லால்¸ திருக்கோயில் இணை ஆணையர் அசோக்குமார்¸ திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி¸ முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன்¸ நகர திமுக செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் அரசு அலுவலர்கள்¸ தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டருடன் இணைந்து முக்கிய பிரமுகர்கள் சாலையை பெருக்குவது¸ குப்பை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
திமுகவினர் பதட்டம்
திருவண்ணாமலை செங்கம் ரோடு அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற தூய்மை பணியின் போது சுற்றுச் சுவர் அருகில் இருந்த கால்வாயில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகனும்¸ டாக்டருமான எ.வ.வே.கம்பன் இறங்கினார். இதைப்பார்த்து பதட்டம் அடைந்த திமுகவினர் டாக்டர் மேலே வாங்க¸ நாங்க அள்ளி கொள்கிறோம் என அழைத்தனர். ஆனாலும் கால்வாயில் இருந்த குப்பைகளை கைகளால் அள்ளி அப்புறப்படுத்திய பிறகே மேலே ஏறி வந்தார் கம்பன். இதே போல் அந்த சுற்றுச் சுவர் ஓரம் குடி மகன்களால் போடப்பட்டிருந்த காலி மதுபாட்டல்களை எடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் எடுத்து குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றார்.
அதிகாரிகளும்¸ முக்கிய பிரமுகர்களும் தூய்மை பணியை மேற்கொண்டதை பார்த்து அரசு பணியாளர்களும்¸ தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் தங்களை இப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் கிரிவலப்பாதை சுத்தமாகவும்¸ சுகாதாரமாகவும் காட்சியளித்தது.