திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை யொட்டி கடும் வெயிலிலும்¸ மழையிலும் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்றுகட்டுக்குள் வந்ததால் தடை நீங்கி கிரிவலத்துக்கு அனுமதியளிக்கப்ட்டுள்ளது. அதன்படி சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் நேற்று அதிகாலை 2.23 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 1.17 மணிக்கு நிறைவடைந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோபூஜை திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. உண்ணாமலை அம்மன் அண்ணாமலையாருக்கு பால் தயிர் சந்தனம் விபூதி குங்குமம் இளநீர் தேன் பழங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் மூலம் அபிஷேகம் நடந்தது.
இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடந்தது. கோயிலுக்குள் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவும்¸ சனிக்கிழமை இரவும் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்றவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் என பக்த பிரமுகர் ஒருவர் மதிப்பிட்டார். கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு பல இடங்களில் அன்னதானம் வழங்கப்படடது. ஆணாய்பிறந்தான் ஊராட்சிக்குட்பட்ட கிரிவலப் பாதையில் அருள்மிகு அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன் அன்னதான குழு சார்பில் மகா அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திருவண்ணாமலை நகராட்சி 25வது வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி பழனி தலைமையில் குழுவின் தலைவரும்¸ ஆனாய் பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவருமான கே.தர்மராஜ் அன்னதானம் வழங்குதலை துவக்கி வைத்தார்.
காலை 6 மணி முதல் இரவு வரை தொடர்ந்து சாம்பார்¸ ரசம்¸ மோர் மற்றும் கூட்டு¸ பொரியலுடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சாப்பாடு வழங்கப்பட்டது. 150 தன்னார்வ தொண்டர்கள்¸ 50க்கும் மேற்பட்ட சமையல்காரர்களை பயன்படுத்தி அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன் அன்னதான குழு¸ அன்னதானம் வழங்கியதில் சாதனை படைத்துள்ளது.
இந் நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர்கள் ஜி.பழனி¸ எஸ்.பிரசன்னா¸ செயலாளர் ஏ.எஸ்.கருணாநிதி¸ பொருளாளர் கே.நாராயணசாமி. துணைத் தலைவர் ஆர்.விஜயகுமார்¸ துணை செயலாளர் எம்.கார்த்திகேயன்¸ 26 வார்டு நகரமன்ற உறுப்பினர் கே. பிரகாஷ்¸ ஒன்றிய கவுன்சிலர் சுபா செல்வமணி¸ காட்டாம் பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அன்பரசு¸ முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.தனகோட்டி¸ கே.ஆறுமுகம்¸ உதயகுமார்¸ டாக்டர் டி. பெருமாள்¸ ரமணா பி.கிஷோர்¸ வி.வன்னிய ராஜா¸ கே.சங்கர்¸ சோலை மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் மூக்குப் பொடி சித்தர் ஆசிரமத்திலும் அன்னதானம் வழங்கப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனர் ஏ.துரை அன்னதானத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை ராஜா¸ பாக்சர் சுரேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை காலையிலிருந்து கொளுத்தும் வெயிலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில்¸ மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அறிவுரையின் பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் க.முரளி வழிகாட்டுதலின்படி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன்¸ உதவி பொறியாளர் ஏ.கலைமணி ஆகியோர் மேற்பார்வையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பக்தர்கள் வெயிலில் சிரமமின்றி நடந்து செல்வதற்கு ஏதுவாக கிரிவல பாதையான 14 கிலோ மீட்டர் தூரம் ரோடுகளில் லாரிகள் மூலம் தண்ணீரை ஊற்றி வெப்பத்தை தணித்தனர்.
மாலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. நேரம் ஆக¸ ஆக திருவண்ணாமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காட்சியளித்தனர். இரவு 11-30 மணியளவில் திடீரென மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் “ஓம் நமச்சிவாயா” “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்ற முழக்கத்துடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.