திருவண்ணாமலையில் பிரபல பள்ளி அருகே உள்ள நந்தவனத்தில் திடீரென பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோட்டில் உள்ள மவுண்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான சுமார் 2.5 ஏக்கரில் நந்தவனம் உள்ளது. பராமரிப்பு இல்லாததால் இங்கு செடி¸ கொடிகள் மண்டி கிடந்தது. கருவேல மரங்களும் உளளன. இதே போல் குப்பைகளும் அதிக அளவில் இருந்தது. சுற்றுச்சுவர் இல்லாததால் அங்கு யார் வேண்டுமானாலும் வந்து போக கூடிய சூழல் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் அந்த நந்தவனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. முதலில் குப்பையில் பற்றிய தீ மளமளவென கருவேல மரம் மற்றும் செடி கொடிகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பகுதியில் வசிப்பவர்கள் ஓடோடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர் ஆனால் தீ கட்டுப்படாமல் கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. சமூக விரோதிகளின் கைவரிசையால் நந்தவனத்தில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இது சம்மந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.