திருவண்ணாமலையில் லிப்ட்டுக்காக அமைக்கப்பட்டு இருந்த பள்ளத்தில் தொழிலாளி தவறி விழுந்து இறந்தார். இதையொட்டி அடகுக்கடை அதிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு
திருவண்ணாமலையை அடுத்த கழிகுளம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல் (வயது 45) தந்தை பெயர் ரத்தினம்.சக்திவேலுக்கு திருமணம் ஆகிவிட்டது. குழந்தைகள் இல்லை. அப்பகுதியில் உள்ள கிரில் ஒர்க்ஸ் கடையில் சக்திவேல் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் திருவண்ணாமலை இராமலிங்கனார் மெயின் ரோட்டில் 5 மாடி கட்டிடத்தில் சக்திவேல் வேலை செய்து வந்தார். அண்டர் கிரவுண்ட்¸ அடகுக்கடை¸ எலக்ட்ரிக்கல் கடை¸ வீடு என அங்கு 5மாடி கொண்ட பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த 5 மாடிக்கும் சென்று வர ஏதுவாக லிப்ட் வசதி செய்யப்பட்டு வருகிறது. லிப்டு அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 3 வது மாடியில் இருந்த சக்திவேல் எதிர்பாராதவிதமாக லிப்டுக்காகஅமைக்கப்பட்டு இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதில் தலையில் அடிபட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சக்திவேலின் சகோதரர் ஞானவேல் திருவண்ணாமலை நகர போலீசில் புகார் செய்தார். போலீசார் கிரில் ஒர்க்ஸ் கடைக்காரர் சரவணன்¸ அந்தக் கட்டிடத்தை கட்டி வரும் அடகுகடை அதிபர் பாபுலால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.