திருவண்ணாமலையில் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டதாக கூறி கன்னிமார் கோயிலை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
திருவண்ணாமலை அருகே உள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் தனலட்சுமி நகரில் 6 தலைமுறையாக கன்னிமார் கோயில் இருந்து வருகிறது. நாச்சிப்பட்டு¸ அரசம்பட்டு¸ எடப்பாளையம்¸ கரியாப்பட்டு ஆகிய கிராமங்களில் வசிக்கும் 100 குடும்பங்களின் குலதெய்வமாக இக்கோயில் விளங்கி வருகிறது. ஆரம்பத்தில் கன்னிமார் சாமி கற்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.
கன்னிமார் சாமிக்கு சிலை செய்து சுற்றுச் சுவர் அமைத்து கோயில் கட்டுவதென கிராம மக்கள் முடிவு செய்தனர். இதைத் தொடாந்து கன்னிமார் சாமிக்கென 6 சிலைகள் வடிவமைக்கப்பட்டு அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் வைத்து அதை சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. கடந்த 15ந் தேதி இந்த புதிய கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கோயில் அமைந்த இடத்தை வருவாய்த்துறையினர்¸ கால்நடை மருத்துவமனை கட்டுவதற்காக கால்நடைத்துறைக்கு ஒப்படைத்த தகவல் தெரிய வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து கோயிலை அகற்ற கூடாது எனவும்¸ கால்நடை மருத்துவமனையை வேறு இடத்தில் கட்டிக் கொள்ளவும் கேட்டு கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அந்த கோயிலை இடிக்க தாசில்தார் சுரேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள்¸ போலீஸ் படையுடன் சென்றனர். இதைக் கேள்விப்பட்டு அங்கு வந்த கிராம மக்கள் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜே.சி.பி வாகனத்தை மறித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு¸ 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
பிறகு மாலை 5-30 மணியளவில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கோயில் இடித்து தள்ளப்பட்டது. கடப்பாறையால் பீடம் பெயர்த்து எடுக்கப்பட்டு கன்னிமார் சிலைகளை வெளியில் எடுத்து ரோட்டில் வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் இரா.அருண்குமார்¸ அதிகாரிகளின் இந்த செயலுக்கு கண்டத்தை தெரிவித்துள்ளார்.