திருவண்ணாமலை டி.ஆர்.ஓ அலுவலக உதவியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதானார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
அரசு அலுவலக உதவியாளர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்தில் உதவியாளராக இருப்பவர் ரமேஷ்(30). இவர் திருவண்ணாமலை அருகே உள்ள மருத்துவாம்பாடியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக சொல்லப்படுகிறது. இதை தன் பெற்றோர்களிடம் அந்த மாணவி தெரிவித்தார். அந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.
டி.ஆர்.ஓ அலுவலக உதவியாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவன் பலி
திருவண்ணாமலை வட்டம் வேடியப்பனூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(40). விவசாயி. இவரது மூத்த மகன் சந்தோஷ்(17). சந்தோஷ்¸ திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய சந்தோஷ்¸ தனது நண்பர் செந்தமிழ்செல்வனுடன்¸ மண் ஏற்றி வந்த டிராக்டரில் உட்கார்ந்து சென்றதாக சொல்லப்படுகிறது.
செல்வபுரம் கிராமம் செல்லும் சென்ற போது டிரைவர் அதிவேகமாக ஓட்டியதால் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சந்தோஷின் மீது டிராக்டர் டிப்பரின் சக்கரம் ஏறியது. இதில் அவர் அதே இடத்தில் நசுங்கி செத்தார்.
இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் பதிவெண் இல்லாத அந்த டிராக்டரின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும்¸ எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன்¸ முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.¸ முக்கூர் என்.சுப்பிரமணியன்¸ எஸ்.ராமச்சந்திரன்¸ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் இ.என். நாராயணன்¸ மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.நைனாகண்ணு¸ மாவட்ட இளைஞர் அணி செயலாளர் டிஸ்கோ குணசேகரன்¸ பாசறை செயலாளர் பர்வதம்¸ இலக்கிய அணி செயலாளர் பர்குணகுமார்¸ ஒன்றிய செயலாளர்கள் ஏ.ஏ.ராமச்சந்திரன்¸ சரவணன்¸ எம்.கலியபொருமாள் உள்பட ஏராளமான தொண்டர்கள் இதில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதிமுக நிர்வாகிகள்¸ லாரியின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த லாரி ரேஷன் கடைகளுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி என்பதால் அதை அங்கிருந்தவர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
விவசாயிகள் கருப்பு பேட்ஜ்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன்¸ ஆணையாளர்கள் கே.சி.அமிர்தராஜ் சத்யமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் எஸ்.சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல்¸ வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன் அனைத்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகர்¸ ஏரி பாசன சங்க தலைவர் நார்த்தாம்பூண்டி சரவணன் உள்பட விவசாய பிரதிநிதிகள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குடிநீர் பிரச்சனையை முழுமையாக தீர்க்க சாத்தனூர் அணையிலிருந்து வேங்கிக்கால் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம ஒரு மூட்டைக்கு ரூ.40 கையூட்டு பெறுவதை கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.
மறியலில் அரசு ஊழியர்கள்
திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் அரசு கலைக்கல்லூரி எதிரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சில தினங்களாக குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டது. இதை சரி செய்ய நகராட்சி அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இன்று மாலை அரசு ஊழியர்களும்¸ அவர்கள் குடும்பத்தினரும் திருவண்ணாமலை-பெங்களுர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாசில்தார் சுரேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். நாளைக்குள் மோட்டார் சரி செய்து தரப்படும் என்ற உத்தரவாதத்தை ஏற்று சாலை மறியலை குடியிருப்புவாசிகள் கைவிட்டனர்.
நகராட்சியின் மெத்தன போக்கை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.