Homeசெய்திகள்கைதியின் உடல் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை

கைதியின் உடல் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை

போலீஸ் அடித்ததால் நாக்கு தள்ளி¸ ரத்தம் கக்கி இறந்தார்

திருவண்ணாமலை ஜெயிலில் காவலில் அடைக்கப்பட்டவர் திடீரென இறந்தார். அவரது உடல் நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  

ᐅ இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம்.

ᐅ பாஜக தலைவர் அண்ணாமலை¸ போனில் தொடர்பு கொண்டு ஆறுதல்.  

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கன்னி அருகே உள்ள தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவரை¸ சாராய வழக்கில் திருவண்ணாமலை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட தங்கமணி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்ப்பட்டது. 

வலிப்பு நோய் வந்ததால் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தங்கமணி சிகிச்சை பலனின்றி இறந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை மறுத்துள்ள அவரது குடும்பத்தினர்¸ இன்று காலை கிராம மக்களுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்சை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அப்போது தங்கமணியின் மனைவி மலர் கலெக்டர் முன்பாக தரையில் உட்கார்ந்து கதறி அழுதார். 

தங்கமணி 

இந்த புகார் மனுவில் மலர் (வயது 43)¸ கூறியிருப்பதாவது¸ 

நாங்கள் பழங்குடி மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் ஊர் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ளது. எங்கள் ஊர் ஏற்கனவே கரும்புள்ளி கிராமம் என்று அழைக்கப்பட்ட நிலையில் எங்கள் ஊரில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் யாரும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதில்லை. இந்நிலையில் கலால் ஆய்வாளர் நிர்மலா மற்றும் போலீசார் கள்ளச்சாரயம் காய்ச்ச சொல்லியும்¸ பணம் கேட்டும் மிரட்டி வந்தார்கள்.  

26.04.2022 அன்று  என் கணவரை  திருவண்ணாமலை கலால் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பணம் தரவில்லை என்றால் BL வழக்கு போட்டு வருடக்கணக்கில் ஜெயிலில் தள்ளிவிடுவோம் என்று ரூ.2¸00¸000 கேட்டு மிரட்டினார்கள். தவறு ஏதும் செய்யாததால் என் கணவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த போலீசார் என் கணவர் மீது பொய் வழக்கு போட்டு திருவண்ணாமலை சப் ஜெயிலில் அடைத்துவிட்டார்கள். அங்கு என் கணவரை சிறை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதில் நாக்கு வெளியே தள்ளி இரத்தம் கக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். நேற்று (27.04.2022) காலை சுமார் 10.00 மணிக்கு சிறையிலிருந்து கலால் ஆய்வாளருக்கு தகவல் அனுப்பியும்¸ மாலை 4.00 மணிவரை யாரும் என் கணவருக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. கலால் நிலைய காவலர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டு என் கணவரை காப்பாற்ற முன்வரவில்லை.

இந்நிலையில் கலால் ஆய்வாளர் நிர்மலாவே நேரில் சென்று என் கணவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து விட்டதாகவும்¸ உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் பிழைக்கமாட்டார் என்றும் தெரிவித்தார்கள். நாங்களும்¸ உறவினர்களும் தீர விசாரித்தபிறகு அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனது கணவரை லாக்கப் மரணம் ஏற்படுத்தியவர்கள் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தங்கமணியின் மனைவி மலர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

ஆனால் தட்டரணை கிராமத்தில் சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது¸ 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த கிராம காட்டுப் பகுதியில் 1600 லிட்டர் ஊறல் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது¸ இதற்கு முன் திருக்கோயிலூர் போலீசார், ஆட்டோவில் கள்ளச் சாராயம் கடத்தி வந்த தட்டரணையைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். சிவலிங்கம் என்பவர் தப்பி ஓடிவிட ஆட்டோபறிமுதல் செய்யப்பட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை 2வது குற்றவியல் நடுவர் மன்ற மாஜூஸ்திரேட்டு பாக்கியராஜ்¸ இறந்த தங்கமணியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இன்று மாலை அவரது முன்னிலையில்  தங்கமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  

இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என கூறி இறந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

பாஜக தலைவர் அண்ணாமலை

இச்சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை¸ தங்கமணியின் மகனும்¸ பேராசிரியருமான தினகரனிடம் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். பாஜக நிர்வாகிகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தங்கமணியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!