திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமிக்கு 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் 10ந் தேதி மாஸ் கிளீனிங் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
சிவதலங்களில் பழமையானது திருவண்ணாமலை ஆகும். காற்று நீர் ஆகாயம் வாயு மற்றும் நெருப்பு என்ற பஞ்சபூதங்களில் அக்னி தலமாக விளங்குவது திருவண்ணாமலையில் ரூபமாகவும் அரூபமாகவும் சித்தர்கள் மற்றும் ஞானிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அருளாசி வேண்டியும் சந்திரன் முழுபலத்துடன் உள்ள பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது நன்மை பயக்கும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இதில் சித்திரை மாதம் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பானதாகும்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திற்கு அடுத்தபடியாக 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு சித்ரா பவுர்ணமி நாளில் இரவில் கிரிவலம் வருவார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 23 மாதங்களாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதன் காரணமாக கடந்த மாதம் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 15ந் தேதி வெள்ளிக்கிழமை பின் இரவு முதல் சனிக்கிழமை பின் இரவு வரை பவுர்ணமி உள்ளதால் வெள்ளி¸ சனி¸ ஞாயிறு என 3 நாட்களும் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள். இந்த மாதம் சித்ரா பவுர்ணமி என்பதால் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சித்ரா பவுர்ணமிக்கு முன்னதாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மைபடுத்திடும் வகையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார்¸ கூடுதல் ஆட்சியர் பிரதாப் மற்றும் அரசு அதிகாரிகள்¸ தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் பேசியதாவது¸
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செடி¸ கொடிகள் மண்டி உள்ளது. குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகிறது. கிரிவலப்பாதை மோசமாக உள்ளதே என கிரிவலம் செல்ல வரும் பக்தர்கள் நினைப்பார்கள். அவர்கள் தப்பாக பேசக் கூடாது. சித்ரா பவுர்ணமிக்கு 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கிரிவலப்பாதை சுத்தமாக இருக்க வேண்டும்.
இதற்காக வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று மாஸ் கிளீனிங்(மாபெரும் தூய்மை பணி) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 18 ஒன்றியங்களில் இருந்தும்¸ பக்கத்து நகராட்சிகளில் இருந்தும் தூய்மை பணியாளர்கள் இதில் பங்கேற்பார்கள். சித்ரா பவுர்ணமி அன்று 40 இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்படும். இந்த உணவு தரமாக இருக்கிறதா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதிப்பார்கள். பிளாஸ்டிக்கை தவிர்க்க மஞ்சப்பை விழிப்புணர்வை சுற்றுச் சூழல் அதிகாரிகள் மேற்கொள்வார்கள். கிரிவலப்பாதையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். ஊராட்சி அலுவலகங்களில் அனுமதி கடிதம் பெற்ற தள்ளுவண்டிகள் மட்டுமே கிரிவலப்பாதையில் அனுமதிக்கப்படும்.
ஞாயிறு அன்று மாஸ் கிளீனிங்கில் அரசு தூய்மை பணியாளர்கள்¸ தன்னார்வ தொண்டர்கள் என மொத்தம் 1240 பேர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்னதானம் வழங்க கட்டுப்பாடு
சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
அக்னி ஸ்தலங்களின் ஒன்றான அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயம் அமைந்துள்ள திருவண்ணாமலை நகருக்கு சித்ரா பௌர்ணமி தினங்களான 15.04.2022 மற்றும் 16.04.2022 ஆகிய 2 தினங்களில் சுமார் 15 லட்சம் பக்கதர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள். இந்த கிரிவலத்தின் போது தனி நபர்கள்¸ தொண்டு நிறுவனங்கள்¸ தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் அளிக்க பின்வரும் 40 இடங்கள் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ராதா திருமண மண்டபம்¸ 63 நாயன்மார்கள் மடம் (துர்கையம்மன் கோயில் அருகில்)¸ ஸ்ரீவிஷ்வபிராமணர் சத்திரம்¸ கோகுல் கிருஷ்ண திருமண மண்டபம்¸ விருதுநகர் நாடார் மடம்¸ வாணியர் மடம் (அக்னி தீர்த்தம் அருகில்)¸ சேஷாத்திரி ஆஸ்ரமம்¸ தர்மராஜா கோயில் முன்புறம்¸ கட்டிட மையம் அருகில்¸ எமலிங்கம் கிழக்குப்பகுதி¸ விஜி திருமண மண்டபம்¸ விட்டோடிகள் சொத்து¸ நிருதிலிங்கம் அருகில்¸ வள்ளலார் கோயில் வடபுரம்¸ வள்ளலார் கோயில் வளாகம்¸ ஆஞ்சநேயர் கோயில் தென்புறம்¸ இராகவேந்திரா கோயில் தென்புறம்¸ பழனி ஆண்டவர் சன்னதி அருகில் காலியிடம்¸ இராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் வளாகம்¸ நித்யானந்தா ஆசரம்¸ சீனுவாசா பள்ளி மைதானம்¸ கௌதம ஆஸ்ரமம்¸ ராமர் பாதம் அருகில் உள்ள (காலியிடம்)¸ 63 நாயன்மார்கள் அன்னதான மடம்¸ அடி அண்ணாமலை(பௌர்ணமி நகர் செல்லும் வழிக்கு எதிர்புறம்)¸ வேடியப்பனூர் சாலை¸ நமச்சிவாய அறக்கட்டளை (தனியார் நபர் கட்டிடம்)¸ மூக்குப்பொடி சாமியார் மடம்¸ முனீஸ்வரர் கோயில்¸ காஞ்சி கூட்ரோடு¸ காஞ்சி கூட்ரோடு எதிர்புறம் – குளத்துமேடு¸ டி.வி.எஸ் பள்ளி ஓடை அருகில்¸ அபிஷேக் லிங்கம்¸ ஸ்ரீலஸ்ரீ லோபமாதா அன்னதான அறக்கட்டளை¸ அகதிகள் முகாம் எதிரில் (தனியார் இடம்)¸ குபேரலிங்கம் அருகில்¸ எஸ்.டி.எம்.எஸ் பஸ் நிறுத்தம்¸ யுயு மார்டன் ரைஸ்மில்¸ சீனுவாசர் திருமண மண்டபம்¸ அர்பனா ஹோட்டல் வடபுறம் உள்ள காலியிடம்.
மேற்குறிப்பிட்ட 40 இடங்களில் அன்னதானம் செய்ய விரும்பும் தனி நபர்கள்¸ தொண்டு நிறுவனங்கள்¸ தனியார் அமைப்புகளுக்கு பின்வரும் நிபந்தனைகளின் கீழ் அனுமதி அளிக்கப்படும்.
அன்னதானம் அளிக்க விரும்புபவர்கள் 07.04.2022 முதல் 14.04.2022 வரை https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி ஆணை பெற வேண்டும். அன்னதானம் அளிக்க விரும்புபவர்கள் மேற்படி அனுமதி ஆணையினை தங்களின் பாஸ்போர்ட் அளவுள்ள 3 புகைப்படங்கள்¸ முகவரிக்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு சான்றின் நகல் ஆகியவற்றுடன் திருவண்ணாமலை நகரம்¸ செங்கம் சாலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் 10.04.2022 தவிர்த்து 07.03.2022 முதல் 14.04.2022 வரை இதர நாட்களில் நேரில் அளிக்க வேண்டும்.
14-04.2022-க்கு பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. விண்ணப்பங்கள் அளிப்பத்தில் உதவிகள் ஏதும் தேவைப்படின் 04175 – 237416¸ 98656 89838¸ 90477 49266 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அனுமதி ஆணையில் குறிப்பிட்டுள்ள தேதி¸ நேரம் மற்றும் இடத்தில் மட்டுமே அன்னதானம் அளிக்க அனுமதி அளிக்கப்படும்.
எந்த காரணத்தை முன்னிட்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அன்னதானம் வழங்க இலையால் ஆன தொன்னை மற்றும் பாக்கு மட்டை பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும்¸ பிளாஸ்டிக் பாக்கெட் மூலம் குடிநீர் விநியோகிக்கக் கூடாது. அண்னதானம் வழங்கும் இடத்திலேயே உணவருந்த பயன்படுத்திய பொருட்கள். மீந்த உணவு பொருட்கள் போட ஏதுவாக குப்பைக் கூடைகளை அன்னதானம் அளிப்பவர்களே எடுத்து வர வேண்டும். அனைதானத்திற்கான சமையல் செய்பவர் சுத்தமானவராகவும்¸ தூய்மையினை கண்டப்பிடிப்பவராகவும் இருக்க வேண்டும். சுத்தமானதாகவும்¸ தரமானதாகவும் உள்ள உணவு மற்றும் இதர பொருட்களை கொண்டே அன்னதானம் தயார் செய்ய வேண்டும்.
அன்னதானம் செய்யும் இடங்களில் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை¸ வருவாய் துறை¸ காவல் துறை மற்றும் உள்ளாட்சி துறை பணியாளர்களால் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அன்னதானம் முடிந்தவுடன் அந்த இடத்தினை முழுமையாக சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். அதற்கு ஏற்றவாறு நபர்களை உடன் அழைத்து வர வேண்டும். உரிய அனுமதி இல்லாமல் அன்னதானம் அளிப்பவர்கள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட இடம் தவிர வேறு இடங்களில் அன்னதானம் அளிப்பவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.