கலசப்பாக்கம் அருகே காப்பலூர் ஏரி புதரில் இறந்து கிடந்த 7 மயில்கள் தோகைக்காக கொல்லப்பட்டதா? என வனததுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகாமையில் காடு போன்ற பகுதி உள்ளது. இங்கு மயில்கள் அதிகம் உள்ளது. அதே போல் மான்களும் உள்ளன. இதனால் மர்ம நபர்கள் விலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சம்மந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் இதை கண்டும் காணாமல் இருந்து வருவதால் வன விலங்குகளை வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது
இந்நிலையில் கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் பெரிய ஏரியில் 3 ஆண் மயில்கள் 4 பெண் மயில்கள் உயிரிழந்து அழுகிய நிலையில் இருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்த மயில்களின் உடல்கள் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அப்பகுதியிலேயே குழி தோண்டி அனைத்து மயில்களும் புதைக்கப்பட்டன.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் மயில் இறந்தது குறித்து தெரியவரும் என்றும்¸ விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தியதால் யாராவது மயில்களை விஷம் வைத்து கொன்று புதரில் தூக்கி வீசி விட்டு சென்றார்களா? தோகைகளை விற்பதற்காக மயில்கள் வேட்டையாடப்பட்டதா? போன்ற விவரங்கள் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர். மேலும் இப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை பகுதிகளில் மயில்களை விஷம் வைத்து கொல்வதும்¸ வேட்டையாடுவதும் அதிகரித்து வருகிறது. காடுகளில் உணவு இல்லாத நிலையில்தான் மயில்கள் விவசாய நிலங்களை தேடி வருகின்றன. ஒரு பக்கம் விஷம் வைத்து கொல்பவர்கள்¸ மற்றொரு பக்கம் தோகைக்காக கொல்லும் வேட்டைக்காரர்கள் என மயில்கள் தவித்து வருவதாக தெரிவிக்கும் விலங்கின ஆர்வலர்கள் தமிழ் கடவுளான முருக பெருமானின் வாகனமாக விளங்கும் மயில்கள் கொல்லப்படுவது வேதனையை அளிக்கிறது எனவும் தெரிவித்தனர். இது தொடராமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.