வந்தவாசி அருகே அடகு கடையில் துளையிட்டு ரூ.22 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கும்பல் சி.சி.டி.வி கேமராவையும் தூக்கிச் சென்றது.
திருவண்ணாமலை மாவட்டம்¸ வந்தவாசியை அடுத்த அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலக வணிக வளாகத்தில்¸ சக்தி முத்தாலம்மன் என்ற பெயரில் நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் சரவணன் நேற்று இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அவரது கடைக்கு பக்கத்தில் டூவீலர் மெக்கானிக் கடை உள்ளது. இந்த கடையின் பூட்டை கொள்ளையர்கள் உடைத்து சுவரில் துளை போட்டு அடகு கடைக்குள் நுழைந்து உள்ளனர். அங்கிருந்த ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகை¸ 3 கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தையும்¸ சி.சி.டி.வி கேமராவின் டிஸ்குகளையும் கொள்ளைடியத்துக் கொண்டு வந்த வழியே சென்று விட்டனர். போகும் போது கடையின் வெளியே இருந்த சி.சி.டி.வி கேமராவை கழட்டிக் கொண்டு சென்றுள்ளனர்.
இன்று காலை டூவீலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அந்த வணிக வளாகத்தில் கடை வைத்திருந்தவர்கள் இது பற்றி டூவீலர் மெக்கானிக் கடைக்காரருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்த போது சுவற்றில் துளையிட்டு அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து தெள்ளாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய்¸ கொள்ளை நடந்த இடத்திலிருந்து மோப்பம் பிடித்து ஓடியது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
அடகு கடையில் கொள்ளையடிக்க வருவதற்கு முன்பு கொள்ளையர்கள் தெள்ளாறு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள வெல்டிங் கடையில் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே கொள்ளையர்கள் தப்பித்து சென்றுள்ளனர். கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் வெல்டிங் கடைக்காரர் வீட்டு ஜன்னல் கண்ணாடியை கல்லால் தாக்கி உடைத்துள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் குமார்¸ ராஜா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவங்களை தவிர்க்க இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என போலீசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.