செங்கம் அருகே 40அடி கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அத்திப்பட்டி கிராமத்தில் அறிவழகன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில் சாலையோரமாக கிணறு உள்ளது. இது 40 அடி ஆழமாகும். இந்நிலையில் பள்ளத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பவர் கூலி ஆட்களுடன் செங்கல் ஏற்ற டிராக்டரில் அத்திப்பட்டு கிராமத்திற்கு சென்றார்.
சாலை வளைவில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலை அருகே இருந்த அறிவழகனுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கவிழ்ந்தது. இதைப்பார்த்ததும் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளிகள் அதிர்ச்சி அடைந்து அவர்களை காப்பாற்ற ஓடி வந்தனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் விழுந்த 4 பேரை மீட்டனர். ஆனால் விக்னேஷ் டிராக்டரின் அடியில் சிக்கிக் கொண்டதால் அவரை மீட்க முடியாவில்லை. இதையடுத்து பொதுமக்கள் மேல் செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமரன்¸ மேல் செங்கம் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஊத்தங்கரை தீ அணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர் உடலை மீட்கும் பணிகளில் தீவிரமாக இறங்கினார்.
கிணற்றில் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து நீரை மோட்டார் மூலம் நீரை வெளியேற்றினார். சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கிரேன் கொண்டு வரப்பட்டு கிணற்றில் விழுந்த டிராக்டரை தூக்கிய பிறகு அதன் அடியில் சிக்கியிருந்த விக்னேஷ்சை பிணமாக மீட்டனர்.
காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்துக்களை தவிர்க்க சாலையோரம் இருக்கும் திறந்தவெளி கிணற்றை சுற்றி பல இடங்களில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் அத்திப்பட்டு கிராமத்திலும் சாலையோரம் உள்ள திறந்த வெளி கிணற்றை சுற்றி தடுப்பு அமைத்தும்¸ எச்சரிக்கை பலகை வைத்தும் விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.