அட்சய திருதியையான இன்று உலக நன்மைக்காக திருவண்ணாமலையில் முதன்முறையாக யாகம் வளர்த்து கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள்¸ பரசுராம முனிவர் பிறந்த நாள்¸ புண்ணிய நதியான கங்கை¸ சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த நாள் என்றெல்லாம் சிறப்பு பெற்ற அட்சய திருதியை நாளில் அட்சயா என்றால் எப்போதும் குறையாதது என்பதால் அன்று தங்க நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
திருவண்ணாமலையில் அட்சய திருதியையான இன்று நகை கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வீட்டில் ஐஸ்வர்யம் பெருக அட்சய திருதியையில் தங்கம் வாங்குவதை விட தானம் செய்வதுதான் சிறந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் முதன்முறையாக அட்சய திருதியையில் யாகம் வளர்த்து கூட்டுப்பிரார்த்தனை நடத்தப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இளவரசுப் பட்டம் சீனு¸ டி.எஸ்.குமார்¸ சிவா¸ ரவி உள்பட 20க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் இந்த யாகத்தை நடத்தினர்.
இது சம்மந்தமாக யாகத்தை நடத்திய ஸ்ரீமகாலஷ்மி மஹாயாக நிர்வாகிகள் கூறியதாவது¸
குபேரன் மகாலட்சுமியை வேண்டி பூஜித்த நாள்¸ சிவபெருமானுக்கு அன்னபூரணியாக அன்னை அன்னம்பாலித்த நாள்¸ மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு அக்ஷய பாத்திரம் கிடைத்த நாள் அட்சய திருதியையாகும்.
வாக்கிய பஞ்சாங்கத்தில்¸ இந்த வருடம் ஸஸ்யாதிபதியாக(பூமியில் விளையக்கூடிய பொருட்களுக்கு அதிபதி) சூரியன் இருப்பதால் மக்களுக்கு சுகமின்மை ஏற்படும் என்றுள்ளது. எனவே அனைத்து மக்களும்¸ அனைத்து செல்வங்களையும் பெற்று நோய்¸ நொடி இன்றி வாழ்ந்திட ஸ்ரீமகாலஷ்மி மஹா யாகம் திருவண்ணாமலையில் முதன்முறையாக நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருவண்ணாமலை மலை மீதுள்ள பவளக் குன்று மடாலயத்தில் இந்த யாகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வினைகளை தீர்க்கும் விநாயகர் பூஜையும்¸ பிறகு அனைத்து பாபங்களையும் நீக்கி புண்ணியம் தரும் வருண பூஜையும் நடைபெற்றது.
தொடர்ந்து 10 ஆயிரத்து 8 மகாலஷ்மி ஜபம்¸ 1008 தாமரை ஹோமம்¸ 108 ஸ்ரீசூக்தபாராயணம் ஆகியவை நடந்தது. அதன்பிறகு மகாலஷ்மி உருவ ரூபத்தின் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க உலக நன்மைக்காகவும்¸ குடும்ப நன்மைக்காகவும்¸ கடன் தொல்லைகளில் இருந்து விடுபடவும் யாகம் வளர்த்து கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றன. சோடா உபசாரம் என்று அழைக்கப்படும் 16 வகையான தீபம் கொண்டு மகாலஷ்மிக்கு ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த மகாலட்சுமி யாக பூஜையில் கலந்துகொண்ட ஆன்மீக பக்தர்களுக்கு மங்கல பிரசாதமான சௌபாக்கிய திரவியங்கள் அடங்கிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அட்சய திருதியையில் நகை மோகத்தில் மக்கள் அலைமோத¸ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் உலக நன்மைக்காக யாகம் நடத்தியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.