திருவண்ணாமலை அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில் உடம்பில் கத்தியால் வெட்டிக் கொண்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
தேவாங்கர் சமூகத்தின் மூலாதாரமாக விளங்கும் தேவலர் என்பவர் ஆடைகளை உருவாக்கவும்¸ உலகிற்கு நெசவு செய்ய கற்றுக் கொடுக்கவும் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து உருவானவர் என்பது வரலாறாகும். அவரது சமூகத்தினர் தேவாங்கர் என பெயரிடப்பட்டனர். ஆந்திரா¸ கர்நாடகா¸ கேரளா¸ தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இவர்கள் அதிகளவில் உள்ளனர். தமிழ்நாட்டில் இவர்கள் தேவாங்கு செட்டியார்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இவர்கள் சைவம்¸ வைணவம் கலாச்சாரத்தை கொண்டிருப்பதால் ராமரையும்¸ சிவனையும் குறித்திடும் வகையில் சௌடேஸ்வரி முன்பு ராமலிங்கம் என குறிப்பிட்டு ராமலிங்க சௌடேஸ்வரி என தங்கள் குல தெய்வத்தை அழைத்து தமிழ்நாட்டில் கோயில்கள் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை- திருக்கோயிலூர் ரோட்டில் உள்ள பெருமணம் கிராமத்தில் தேவாங்கர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்கு ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று கணபதி¸நவகிரகம்¸ மகாலட்சுமி¸ வாஸ்து ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து தீபாராதனை வானவேடிக்கைகள் நடந்தது. இன்று கோபூஜை நடந்தது. பிறகு கலச புறப்பாடு நடைபெற்றது. கோபுர கலசத்தில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து குளக்கரையில் அம்மனுக்கு அபிஷேகம்¸ காப்பு கட்டுதல் நடைபெற்றது. கத்தி விளையாட்டு எனும் நேர்த்திக் கடன் செலுத்துதல் நடைபெற்றது. வீரக்குமாரர்கள் என்றழைக்கப்படுவர்கள் கத்தியோடு நடனமாடினர். பிறகு கத்தியால் உடம்பில் கிழித்துக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். கத்தியால் வெட்டப்பட்ட இடங்களில் கோயில் பூசாரிகள் மஞ்சள் கலவையை பூசினர். விநோதமான இந்த நேர்த்திக் கடன் செலுத்துதல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
இரவு வாணவேடிக்கைகளுடன் அலங்கார தேரில் அம்மனின் வீதியுலா நடைபெற்றது. அப்போது அபிஷேக பொடிகள் சேர்க்கப்பட்ட 25 கிலோ அரிசியால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றப்பட்டு எடுத்து வரப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு சுவாமி பிரசாதமும்¸ அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழாவுக்கு அகில இந்திய தேவாங்கர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் டி.மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊர் பிரமுகர் சுந்தரம்¸ ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம தேவாங்கு குலமக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.