திருவண்ணாமலை அருகே பைக்கில் வந்த ஜோதிடர் மீது லாரி மோதியது. இதில் அவர் லாரி சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து இறந்தார்.
3 ரோடு சந்திப்பில் வேகத் தடை இல்லாததால் விபத்துகள் நேர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு¸
கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அண்ணாநகரைச் சேர்ந்தவர் வெள்ளயங்கிரி (வயது 39)¸ தந்தை பெயர் கோவிந்தசாமி கவுண்டர். வெள்ளயங்கிரிக்கு இன்னும் திருமணமாகவில்லை. சிறு வயது முதலே ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட வெள்ளயங்கரி¸ போகப் போக சாமியாராக மாறினார். பிறகு ஜாதகமும் கற்றுக் கொண்டு ஜோசியம் பார்த்து வந்தார்.
கடந்த 1 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த வெள்ளையங்கிரி இங்குள்ள தேனிமலையில் கஜேந்திரன் என்பவரது வீட்டில் தங்கி ஜோசியம் பார்த்து வந்தார். இன்று காலை 10 மணியளவில் திருவண்ணாமலையிலிருந்து தண்டராம்பட்டு செல்லும் ரோட்டில்¸ கீழ்செட்டிப்பட்டு அருகே ஒரு பழக்கடையில் பலா பழம் வாங்கிக் கொண்டு தனது பைக்கில் திருவண்ணாமலைக்கு செல்ல திரும்பினார்.
அப்போது வேகமாக வந்த சரக்கு லாரி ஒன்று அந்த பைக் மீது மோதியது. இதில் வெள்ளயங்கிரி லாரியின் முன்சக்கரத்தில் சிக்கினார். அவரது பின் தொடையில் லாரியின் சக்கரம் ஏறி நின்றது. இதில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து செத்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்¸ லாரியிலிருந்து குதித்து தப்பி ஓடி விட்டார். தகவல் கிடைத்ததும் தண்டராம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். லாரியை நகர்த்தி லாரி சக்கரத்தில் சிக்கியிருந்த வெள்ளயங்கிரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்மந்தமாக தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
அதிவேக வாகனங்கள்
திருவண்ணாமலை-தண்டராம்பட்டு மெயின் ரோட்டில் உள்ள கீழ்செட்டிப்பட்டு கூட்டு ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்கி வருகிறது. இந்த வழியாகத்தான் சாத்தனூர் அணை¸ அரூர்¸ சேலம்¸ கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் 3 ரோடு சந்திப்பான இந்த கூட்டு ரோடில் வேகத்தடை இல்லாத காரணத்தால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் நேரத்தில் ஏர்ஹாரனை அலற விட்டு தனியார் பஸ்கள் அதிவேகமாக சென்று மக்களை பதட்டமடைய வைக்கின்றன. இன்று நடைபெற்ற விபத்துக்கும் வேகமாக வந்த லாரிதான் காரணம் என சொல்லப்படுகிறது. எனவே விபத்துக்களை தடுக்க கீழ்செட்டிப்பட்டு கூட்டு ரோடில் 3 சாலைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.