திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் அந்த இடத்தை விற்பனை செய்தது குறித்து அதிமுக பிரமுகர் விளக்கம் அளித்துள்ளார்.
பொது இடங்களில் சிலைகளை வைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் சொந்த இடத்தை விலைக்கு வாங்கி மறைந்த தலைவர்களின் சிலைகளை வைத்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் அதிமுக ஆட்சி காலத்தில் பொது இடத்தில் வைக்கப்பட்ட எம்ஜிஆர்¸ ஜெயலலிதா சிலை அகற்றப்பட்டது. இதையடுத்து அப்போது அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன் ஆரணியில் சொந்த இடத்தை விலைக்கு வாங்கி எம்ஜிஆர்¸ ஜெயலலிதா சிலைகளை அமைத்தார்.
இந்நிலையில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் தமிழ்நாட்டில் தனியார் இடங்களில் 20க்கும் மேற்பட்ட கருணாநிதி சிலைகளை நிறுவ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையிலும் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்லும் பாதையையும்¸ வேலூர் செல்லும் ரோட்டையும் இணைக்கும் இடத்தில் திருவண்ணாமலை நகரை பார்த்தவாறு ஐந்தரை அடி உயர வெண்கலத்தால் ஆன கருணாநிதி சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக பீடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நான்கு புறங்களிலும் தகர ஷீட்டுகளால் மறைவு ஏற்படுத்தப்பட்டு இந்த பணி நடந்தது. சிலை அமைக்கும் பணியை அவ்வப்போது அமைச்சர் எ.வ. வேலு சென்று பார்வையிட்டு வந்தார்.
திருவண்ணாமலையில் முக்கிய இடத்தில் கருணாநிதிக்கு சிலை – முந்தைய செய்தியை படிக்க… https://www.agnimurasu.com/2021/12/blog-post_12.html
இந்நிலையில் கருணாநிதி சிலை கட்ட இடம் ஆக்கிரமித்து இருப்பதாகவும்¸ இந்த சிலை கிரிவலப்பாதையில் அமைந்தால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும்¸ கட்டுமானம் நடைபெற்றால் அப்பகுதியில் உள்ள கால்வாயில் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் சிலை அமைக்கப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் இன்று காலை 10 மணி அளவில் சிலை வைக்கப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் கோட்டாட்சியர் வெற்றிவேல்¸ நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் மற்றும் அலுவலர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் இடத்தை ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு அதுவரை அந்த இடத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
கருணாநிதி சிலை அமைக்க இடத்தை விற்பனை செய்த ராஜேந்திரன் என்பவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். தற்போது அவர் அதிமுகவில் நகர அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் ஸ்ரீஅருணை ஆம்புலன்ஸ் சர்வீஸ்¸ ஸ்ரீஅருணை டிராவல்ஸ் ஆகியவற்றை நடத்தி வருகிறார். இதனால் அவரை ஆம்புலன்ஸ் ராஜேந்திரன் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
ராஜேந்திரன் |
கருணாநிதி சிலை அமைக்க இடம் தந்தது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில்¸
எனக்கு நான்கு பிள்ளைகள் முதல் மகன் வங்கி அதிகாரி. இரண்டாவது மகள் ஆசிரியை. மூன்றாவது மகன் வழக்கறிஞர். 4-வது மகள் ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளார். நான் தற்போது மனைவி¸ பிள்ளைகள் அரவணைப்பு இன்றி தனியாக வசித்து வருகிறேன். கருணாநிதிக்கு சிலை வைக்க தந்த 96 சதுர அடி இடத்தை 98ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினேன். அங்கு கடை கட்டி வாடகைக்கு விட்டு இருந்தேன் இதன் மூலம் எனக்கு மாதம் ரூ 6 ஆயிரம் கிடைத்து வந்தது. 2001 ஆம் ஆண்டு வருவாய்த்துறை மூலம் இடங்கள் அளக்கப்பட்ட போது எனக்கு 2 சென்ட்டாக பட்டா வழங்கப்பட்டது.
நான் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன். அந்த சமயத்தில்தான் எ.வ.வேலு¸ என்னை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தேவையான அனைத்து உதவிகளும் செய்தார். இதனால் உயிர் பிழைத்தேன். சிலை வைக்க 96 சதுர அடி இடத்தை கேட்டார். தர உடனே ஒப்புக் கொண்டேன். அவரது மகன் குமரனுக்கு எழுதி கொடுத்து விட்டேன் என்றார்.
எம்ஜிஆர்¸ ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க முடியாத நிலையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அதிமுக பிரமுகர் இடம் அளித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருணாநிதி சிலை அமைக்க முறைகேடாக பட்டா வாங்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கோர்ட்டில் வழக்கு இருப்பதால் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 தேதி சிலையை திறக்கும் முடிவுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.