மடியில் கனம் இருப்பதால்தான் அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை என மக்கள் நினைப்பதாக திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் கூறினார்.
வேலூர் தங்க கோயிலுக்கு சென்று விட்டு இன்று திருவண்ணாமலைக்கு வந்திருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அர்ப்பனா ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது¸
திமுகவினர் திருந்தி இருப்பார்கள் என்றுதான் 10 ஆண்டுகாலத்திற்கு பிறகு மக்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால் திமுகவினர் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இந்த ஓர் ஆண்டு கால ஆட்சி இருந்தது தான் உண்மை. தேர்தல் வாக்குறுதியில் இல்லத்தரசிகளுக்கு மாதாமாதம் ரூ 1000 வீடு தேடிப் போய் சேரும் என்று சொன்னார்கள். அதைப்பற்றி இப்போது பேசுவதே இல்லை. கொரோனா காலத்தில் அண்ணன் பழனிசாமி ஆட்சியில் சொத்துவரி உயர்த்திய போது அதை எதிர்த்து திமுக தலைவர் போராட்டம் செய்தார். இப்போது கொரோனாவால் பொருளாதாரம் நலிவடைந்து உள்ளது¸ மீண்டும் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்த பிறகுதான் சொத்துவரி உயர்வைப் பற்றி சிந்திப்போம் என ஸ்டாலின் கூறினார். ஆனால் மாஸ்க்கை கழட்டியவுடன் சொத்து வரியை 180 சதவீதம் ஹிட்லர் பாணியில் உயர்த்தி இருக்கிறார். ஸ்டாலின் நடவடிக்கை ஹிட்லர் டைப்பாக தெரிகிறது.
பேரறிவாளன் விடுதலைக்கு திமுக தான் காரணம் என்பது போல் சித்தரிக்கின்றனர். 2014 ஆம் ஆண்டே அம்மா அவர்கள் பேரறிவாளன் விடுதலைக்கு பிள்ளையார் சுழி போட்டார்கள். பழனிச்சாமி ஆட்சியிலும் அதற்காக போராடினார்கள். திமுகவினரும் போராடி இருக்கலாம். ஆனால் இதை பெரிய சாதனையாக சொல்கிறார்கள். பேரறிவாளன் தனக்காக குரல் கொடுத்தவர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். இதில் திமுக அரசியல் செய்கிறது. எல்லாவற்றிலும் அரசியல் செய்கின்றனர். இந்த ஆட்சி மக்களுக்கு ஒரு வேதனை தான். மின்வெட்டால் விடியல் ஆட்சியில் இருண்ட தமிழகம் தான் உருவாகியுள்ளது. தாலிக்கு தங்கம் போன்ற அம்மா கொண்டு வந்த திட்டங்களை இருட்டடிப்பு செய்து விட்டனர். ஏழை எளிய மக்கள்¸ தொழிலாளர்களுக்கும் பயனுள்ளதாக இருந்த அம்மா உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது. உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி அம்மா உணவகங்களை கூறி வருகிறார்கள். விவசாயிகள் தொழிலாளர்கள் வியாபாரிகள் அரசு ஊழியர்கள் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியினருடன் சந்திப்பு |
நீட் தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து சட்டம் கொண்டு வந்ததால்தான் தீர்வு ஏற்படும். ஆனால் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என கூறி எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. வருங்காலத்தில் திமுக பெரிய தோல்விகளை சந்திக்கும். சிறுபான்மை மக்களையும் ஏமாற்றுகிறார்கள். சிறுபான்மை மக்களும் தெரிந்து ஏமாறுகிறார்களா? அல்லது தெரியாமல் ஏமாறுகிறார்களா? என்பது தெரியவில்லை. சிறையில் இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை விடுதலை செய்வோம் என்றார்கள். ஆனால் அவர்கள் வெளியில் வரமுடியாதபடி உத்தரவு போட்டுள்ளார்.
பிஜேபி தமிழகத்தில் காலூன்றி விடுவார்கள் என குழந்தைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தாய்மார்கள் பூச்சாண்டியை காட்டி பயப்பட வைப்பது போல் திமுகவினர் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மக்களை குறிப்பாக சிறுபான்மையினரை ஏமாற்றி வருகிறார்கள். எல்லா நேரத்திலும் அவர்களை ஏமாற்ற முடியாது. வருங்காலத்தில் திமுக பல தோல்விகளை சந்திக்கும்.தமிழ்நாட்டு மக்களின் சோதனை தான் திமுகவின் சாதனை.அவரது கட்சியினர் தான் செழிப்பாக உள்ளனர்.தனக்கு வாக்களித்த மக்களுக்கு விலைவாசி உயர்வை திமுக பரிசாக அளித்துள்ளது. உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பி வந்த மருத்துவ மாணவர்களுக்கு உடனடியாக மருத்துவ கல்லூரியில் சேர்த்து மருத்துவ படிப்பு தொடர செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுக அரசை சும்மா எதிர்ப்பது போல் அதிமுக செயல்படுகிறது. அவர்களுக்கு மடியில் கனம் இருப்பதால் பயம் இருக்கிறது.அதனால்தான் அமைதியாக இருக்கின்றனர் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அது எதிர்கட்சியின் ஒரு தவறான செயல்பாடாகும்.எது வந்தாலும் என்ன என்பது போல் போராட வேண்டும்.எதிர்க்கட்சி என்ற இடத்தை பிடிக்க பிஜேபி செயல்பட்டு வருகிறது.நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்பது போல் செயல்படுகின்றனர். அது ஒரு கட்சியின் முயற்சி.அதை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் மக்கள் யாரை ஏற்றுக் கொள்வார்கள் என்பது வரும் தேர்தல்கள் முடிவு செய்யும். வரும் தேர்தல்களில் அதிமுக- அமமுக இணையுமா என்ற யூகத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் அரசியல் ஞானியோ¸ஜோசியரோ கிடையாது. தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் அமமுகவை பாதிக்காது. எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ அதற்காக நாங்கள் போராடுவோம். வருங்காலத்தில் தமிழக மக்கள் எங்களுக்கு நிச்சயமாக வெற்றிகளை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சசிகலா செல்லும் இடமெல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. அவரை வரவேற்க அதிமுக தொண்டர்கள் வரவில்லை என்றால் அதிமுகவினரைத்தான் கேட்க வேண்டும்.
இவ்வாறு டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.
சசிகலாவை வரவேற்க பழைய எழுச்சி இல்லையே என்று ஒரு நிருபர் கேள்வி கேட்பதற்கு எனக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை என டிடிவி தினகரன் கூறினார்.
இதைத் தொடர்ந்து அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் வந்தார்.