திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் முதலில் விவேகானந்தருக்கு சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என ராமகிருஷ்ணா ஆசிரமம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக கடந்த 2015ம் ஆண்டே மனு கொடுத்திருப்பதை நினைவுப்படுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்லும் பாதையையும்¸ வேலூர் செல்லும் ரோட்டையும் இணைக்கும் பகுதியில் தனியார் இடத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கருணாநிதி சிலை கட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும்¸ கட்டுமானம் நடைபெற்றால் அப்பகுதியில் உள்ள கால்வாயில் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு அதுவரை அந்த இடத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தனர்.
இந்நிலையில் கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தின் அருகே விவேகானந்தர் சிலை அமைக்க ராகிருஷ்ணா ஆசிரமம் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க தாசில்தாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இது குறித்து இந்த மனுவை அளித்திருந்த திருவண்ணாமலை கிரிவலப்பாதை கோசாலையில் இயங்கி வரும் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் செயலாளரும்¸ சுவாமி விவேகானந்தர் சிலை அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஏ.ஜெயபிரகாஷ் நம்மிடம் கூறியதாவது¸
கடந்த 2015ம் ஆண்டு¸ ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விவேகானந்தர் சிலை அமைக்க இடம் வேண்டி மனு அளிக்கப்பட்டது. இம்மனுவின் மீது அப்போது நடவடிக்கை எடுத்த அரசு அலுவலர்கள் கிரிவலப்பாதையில் அகலப்படுத்தும் பணி நடைப்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னதன் பேரில் நாமும் அமைதியாக மேற்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் அவ்வப்போது கிரிவலப்பாதையில் நடைப்பெறும் பணிகளை பாவையிட்டுக் கொண்டே வந்திருந்தோம்.
ஜெயபிரகாஷ் |
திருவண்ணாமலை ஆன்மீக பூமி. இங்கு சுவாமி விவேகானந்தருக்கு கட்டாயம் சிலை வேண்டும்.. அரசு சொல்லும் அனைத்திற்கும் நாங்கள் கட்டுப்படுகின்றோம். எங்களுக்கு தேவை எல்லாம் விவேகானந்தருக்கு கிரிவலப்பாதையில் ஒரு சிலை அவ்வளவுதான். அண்ணா நுழைவு வாயில் அருகில் விவேகானந்தர் சிலை வைக்க முதலில் மனு கொடுத்திருப்பது நாங்கள்தான். அதனால் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் விவேகானந்தர் சிலைக்கு இடம் ஒதுக்கிவிட்டு அடுத்ததாக எது வேண்டுமானால் செய்துக் கொள்ளட்டும். விவேகானந்தர் எல்லோருக்கும் பொதுவானவர். இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.