திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அசாமில் இருந்து வாங்கி வரப்படும் யானை இந்த வருட தீபத்திருவிழா உற்சவங்களில் பங்கேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 23 வருடங்களாக உற்சவங்களில் பங்கேற்று பக்தர்களிடமும்¸ பொது மக்களிடமும் அன்பாக பழகி வந்த யானை ருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி நள்ளிரவில் திடீரென உயிரிழந்தது. நாய் விரட்டியதால் இரும்பு தடுப்பில் மோதி யானை உயிரிழந்ததாக சொல்லப்பட்டாலும் யானை இறப்பில் மர்மம் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. வட ஒத்தைவாடை தெரு¸ கோயில் மதில்சுவர் அருகில் ருக்கு புதைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலை துறை அமைச்சராக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேவூர் ராமச்சந்திரன் பதவி வகித்து வந்தார். எனவே திருவண்ணாமலை கோயிலுக்கு புதிய யானை வந்து விடும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர் ஆனால் இந்து சமய அறநிலை துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன் யானை வாங்குவதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை திருவண்ணாமலைக்கு வந்திருந்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெட்டவெளிச்சம் ஆக்கினார். திருவண்ணாமலை கோயிலுக்கு யானை இல்லாதது குறித்து எனது கவனத்துக்கு கொண்டு வரவில்லை என்று சேவூர் ராமச்சந்திரரனை அவர் பக்கத்தில் வைத்துக்கொண்டு சொன்னது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. யானை தானே வாங்கி விடலாம் என அவரும் உறுதிமொழி கூறிவிட்டு சென்றார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல் வரவே திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட எ.வ.வேலு உள்ளிட்ட வேட்பாளர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு யானை வாங்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். பிறகு திமுக ஆட்சி அமைந்ததும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி ஏற்ற எ.வ.வேலுவிடம் திருவண்ணாமலை கோவிலுக்கு யானை வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் தமிழ்நாடு¸ கேரளா¸ கர்நாடகாவில் யானைகள் இல்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் தான் உள்ளது எனவே அங்கிருந்து யானையை வாங்கி வர ஏற்பாடுகள் செய்யப்படும் இதற்காக நான்கு துறைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியதுள்ளது. இது முடியவே 6 மாதங்கள் ஆகும். அதன் பிறகுதான் யானை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிலளித்தார். இதனால் கடந்த வருடமும் யானை இல்லாமல் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருவண்ணாமலைக்கு வந்திருந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை¸ பல சடங்குகள் யானையை வைத்துதான் நடக்கின்றன. பஞ்சபூத ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இரண்டரை வருடமாக யானை இல்லாமல் பூஜைகள் நடைபெற்று வருவதால் உடனடியாக யானை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த வருடமாவது திருவண்ணாமலை கோயிலுக்கு யானை வாங்கி தீபத் திருவிழா உற்சவங்களில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று பக்தர்களும் இந்து அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அசாமில் இருந்து யானை வாங்கி வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை நன்கொடையாக தர தொழிலதிபர் ஒருவர் இசைவு தெரிவித்து உள்ளார். இதற்காக அவருடைய நிறுவனத்தின் மேலாளர் ஒருவரும்¸ யானைப்பாகன் ஒருவரும் அசாமில் முகாமிட்டுள்ளனர். அசாமில் தனியார்கள் வளர்த்து வரும் யானைகளை அவர்கள் பார்வையிட்டனர்.
5 வயதிலிருந்து 8 வயதுக்கு உட்பட்ட 15 யானைகளை அவர்கள் பார்த்துள்ளனர். இதில் ஒரு யானையை அந்த தொழிலதிபர் தேர்வு செய்த பிறகு நல்ல நாள் பார்த்து அரசிடமிருந்து உரிய அனுமதி பெற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அந்த யானையை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும்¸ இதற்கு 20 நாட்களுக்கு மேல் ஆகலாம் என்றும்¸ இந்த ஆண்டு தீபத்திருவிழா உற்சவத்தில் யானை கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-செ.அருணாச்சலம்.