தனியாக இருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 22 பவுன் நகை¸ ரூ.4 லட்சத்துடன் கொள்ளையர்கள் எஸ்கேப் ஆனார்கள். இதில் கப்பல் இன்ஜினியர் வீடும் ஒன்றாகும்.
மாவட்ட தலைநகராகவும்¸ ஆன்மீக நகராகவும் திருவண்ணாமலை விளங்கி வருகிறது. நகர் பகுதிகளில் வீடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில் பெரும்பாலோனார் புறநகர் பகுதிகளில் மனைகளை வாங்கி வீடு கட்டி குடியேறி வருகின்றனர். இதனால் திருவண்ணாமலையை சுற்றி புறநகர் பகுதிகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
திருவண்ணாமலை சாரோன் அருகிலுள்ள ஹைடெக் நகரில் மனைகளை வாங்கி சிலர் வீடுகளை கட்டியுள்ளனர். அங்கு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றும் ஜெய்சங்கர்¸ மும்பையில் கப்பலில் இன்ஜினியராக பணியாற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வீடுகளை கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 2 பேரின் வீடுகளும் அடுத்தடுத்து உள்ளன.
ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தார் வீட்டை பூட்டிக் கொண்டு உறவினரின் வீட்டுக்கு சென்று விட்டனர். இதே போல் ராதாகிருஷ்ணன் மும்பை சென்று விட்ட நிலையில் அவரது மனைவி சவுமியா தனது மகனுடன் வீட்டை பூட்டிக் கொண்டு உறவினரின் வீட்டுக்கு சென்று விட்டார்.
அக்கம் பக்கத்தில் யாரும் இல்லாத தனியான வீடு. அதுவும் சிசிடிவி கேமரா இல்லாத வீடு. சொல்லவா வேண்டும் கொள்ளையர்களுக்கு. 2 வீடுகளின் பூட்டை உடைத்து நுழைந்த கொள்ளையர்கள் ஜெய்சங்கரின் வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை¸ இரண்டரை லட்சம் ரூபாய்¸ ராதாகிருஷ்ணின் வீட்டில் பீரோவில் இருந்த 12 பவுன் நகை¸ ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகியவற்றை திருடிக் கொண்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து ஜெய்சங்கரும்¸ சவுமியாவும் திருவண்ணாமலை நகர போலீசில் புகார் செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். இது சம்மந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தந்தால் அப்பகுதிகளில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்படும் என்று அறிவுருத்தப்பட்டுள்ள நிலையில் அதை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதாலேயே இந்த மாதிரியான கொள்ளைகள் நடப்பதாக தெரிவித்த போலீசார்¸ சிசிடிவி கேமரா இல்லாததும் கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டதாகவும் கூறினர்.
கொள்ளை நடந்த வீடுகளின் அருகில் அடர்ந்து வளர்ந்த புங்கை மரத்தின் அடியில் தினமும் இரவு சில சமூக விரோதிகள் கும்பலாக வந்து அமர்ந்து போதை வஸ்துகளை உட்கொள்வார்கள் என்று போலீசாரிடம் அங்கிருப்பவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கும்பல் மீது போலீசாரின் சந்தேக பார்வை திரும்பியுள்ளது.