திருவண்ணாமலையில் உதவி கலெக்டர் நடத்திய கூட்டத்தில் கேஸ் கம்பெனிகள் கட்டாய வசூல் செய்வதாக சராமாரியாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை¸ தண்டராம்பட்டு¸ கீழ்பென்னாத்தூர் தாலுக்கா எரிவாயு ஏஜென்சி மற்றும் நுகர்வோர் ஆலோசனை கூட்டம் பல வருடங்களுக்கு பிறகு இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். தனி வட்டாட்சியர் வைதேகி மஞ்சுநாதன்¸ வட்ட வழங்கல் அலுவலர்கள் பாலமுருகன்¸ லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் எரிவாயு ஏஜென்சி மற்றும் நுகர்வோர் ஆலோசனை குழு உறுப்பினர் நடுப்பட்டு ரவி பேசுகையில் பழங்குடியினருக்கு பாரதப் பிரதமர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச கேஸ் இணைப்பு ஒதுக்கீடு எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டும் என்றும்¸ செங்கம் பகுதியில் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் நீப்பத்துரை¸ வெள்ளாளம்பட்டி¸ ஆனந்தவாடி¸ தண்டம்பட்டு¸ குறும்பம்பட்டி போன்ற ஊர்களில் வசிக்கும் பழங்குடியினரும் இத்திட்டத்தில் பயனடைய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய கேஸ் நுகர்வோர்கள், கேஸ் ஏஜென்சிகள் மீதும்¸ பெட்ரோல் பங்குகள் மீதும் சரமாரி புகார் தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு¸
வீட்டில் உள்ளவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்பும்போது கேஸ் விநியோகம் செய்யும் நபர்கள் வந்து விட்டு போய்விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். எனவே கேஸ் ஏஜென்சியின் வேலை நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். கேஸ் ஏஜென்சி சப்ளை செய்யும் நபர்கள் நுகர்வோரிடம் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். கிராமங்களில் வீட்டுக்கு வந்து கேஸ் சிலிண்டர் தருவதில்லை. ஊரின் எல்லையிலேயே நிறுத்தி விட்டு நுகர்வோரை வந்து பெற்றுக் கொள்ள கூறுகிறார்கள். அப்போதும் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர். சிலிண்டர் அளவு தெரிவதில்லை. 2 வருடத்திற்கு ஒருமுறை டியூப் மாற்றி தருவதில்லை. மேலும் டியூப் செக் பண்ண வேண்டும் என கூறி ரூ.300 வரை பெற்றுக்கொண்டு செல்கின்றனர். ஆனால் செக் செய்வதில்லை.
பெட்ரோல் பங்கில் வழங்கப்படும் பெட்ரோல் தரமில்லை. கலப்பட பெட்ரோல் வழங்கப்படுகிறது. அவசர தேவைக்கு அங்கு பாத்ரூம் வசதியில்லை. பெட்ரோல்¸ டீசலை அளவு குறைவாகவும் தருகின்றனர்.
இவ்வாறு புகார் தெரிவிக்கப்பட்டது.
கேஸ் கம்பெனிகளின் கட்டாய வசூல் மற்றும் கலப்பட பெட்ரோல் விற்பனை குற்றச்சாட்டால் அதிர்ச்சி அடைந்த கோட்டாட்சியர் வெற்றிவேல் கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் இங்கு கூறப்பட்ட குறைகளை கண்டிப்பாக களையவேண்டும்¸ சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள் நுகர்வோரிடம் அதன் பில்தொகைக்கு மேல் பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்¸ இது சம்மந்தமாக தொடர்ந்து புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உள்ள குறைபாடுகளை களைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்த அவர் அடுத்த கூட்டத்திற்கு எரிவாயு ஏஜென்சி உரிமையாளர்கள் வரவில்லை என்றால் தொடர்ந்து 3 நோட்டீஸ்கள் அனுப்பப்படும். 3வது நோட்டீசுக்கு மேல் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
கூட்டத்தில் ஆர்.கே.பாரத் கேஸ் ஏஜென்சி சிவராஜ்¸ சாத்தனூர அணை நீர்தேக்க திட்ட செயலாளர் ஜெயராமன்¸ தமிழ்நாடு விவசாய பசுமை புரட்சி முன்னேற்ற சங்க தலைவர் மோகன்ராஜ்¸ கே.கே.சாமி¸ பழனிச்சாமி¸ சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.