திருவண்ணாமலை வேங்கிக்காலில் 23 ஆயிரம் சதுர அடியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
நகை, ஆபரணங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் சங்க காலத்தில் தொண்டைநாடு என்று அழைக்கப்பட்டது. இதற்குரிய வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுகள்¸ நடுகற்கள் கிடைத்திருக்கின்றன. இம்மாவட்டத்தில் பல்லவர்கள் ஆட்சி காலத்தின் போது 6ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்துடன் கூடிய நடுகற்கள் செங்கம்¸ தண்டராம்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதே போல் கோயில்¸ மடம் ஆகியவற்றில் பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. சம்புவராயர்கள் ஆட்சியின் போது பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்¸ நகை ஆபரணங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
முதல் வழிபாட்டு சிலை
மேலும் தண்டராம்பட்டு வட்டம் தா.மோட்டூர் கிராமத்தில் 3.25 மீட்டர் அகலமும்¸ 3.25 மீட்டர் உயரமும்¸ 10 செ.மீ தடிமன் கொண்ட தமிழகத்தின் முதல் வழிபாட்டு சிலையான தாய்தெய்வம் என சொல்லப்படும் சிலை கிடைத்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட கலை பொக்கிஷங்களை பாதுகாத்திடவும்¸ இம்மாவட்டத்தின் தொன்மையை மக்களுக்கு எடுத்து கூறிடும் வகையிலும் திருவண்ணாமலையில் அரசு அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது.
இதில் இம்மாவட்டத்தில் கிடைத்த 3 ஆயிரம் வரலாற்று சின்னங்கள் இடம் பெறும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.
வேங்கிக்காலில் அரசு அருங்காட்சியகத் துறை மூலமாக ரூ.1 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியக பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா¸ அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் உடன் இருந்தனர்.
நவீன தொழில்நுட்பம்
இந்த அருங்காட்சியகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள வரலாற்று சின்னங்கள்¸ பொருட்கள் மற்றும் சென்னை உட்பட பிற மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படும் வரலாற்று சின்னங்கள்¸ பொருட்கள் காட்சிக்கு வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று சின்னங்கள்¸ சிறப்பு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுவது குறித்த தகவல்கள் பரிமாற்றம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி மெய்நிகர் வாசிப்புடன்(Virtual Reading)அமைக்கப்பட்டு வருகிறது.
23 ஆயிரம் சதுர அடி
தமிழ்நாட்டின் 22-வது மாவட்ட அரசு அருங்காட்சியகம் இதுவாகும். 23 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகத்தில் சமூக¸ பொருளாதார¸ அரசியல்¸ கலை¸ அறிவியல் உட்பட ஏழு விதமான வரலாறுகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பாரம்பரியமான பொருட்கள் கால வரிசைப்படி காட்சி படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்¸ அருங்காட்சியக வளாகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னம் பெரிய அளவில் நிறுவும் பணிகளும் நடைபெற்று வருகிறது.