திருவண்ணாமலை கிருஷ்ணன் தெருவில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி திருவிழா நடைபெற்று வருகிறது. 57வது வருடமாக இந்த விழா நேற்று இரவு நடைபெற்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் விழா தொடங்கியது. அப்போது சிறுவர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்து வழிபாடு செய்தனர். விழாவையொட்டி கோலாட்டம்¸ கரகாட்டம்¸ குயிலாட்டம்¸ நையாண்டி மேளம்¸ பொய்கால் குதிரை¸ கும்மி கொட்டுதல் போன்றவைகள் நடைபெற்றன.
பிறகு உரி அடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 31அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் நிறுவப்பட்டிருந்தது. ஏராளமான இளைஞர்கள் மரத்தின் உச்சியில் இருந்த பரிசு பொருளை எடுக்க போட்டி போட்டுக் கொண்டு வழுக்கு மரம் ஏறினர். மரத்தில் எண்ணெய் ஊற்றப்பட்டிருந்ததாலும்¸ மரம் ஏறிய இளைஞர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டதாலும் பலர் பாதி தூரம் ஏறிய வேகத்தில் வழுக்கி கீழே சரிந்தனர்.
கடைசியில் கூடி இருந்த பொதுமக்களின் உற்சாக குரலோடு சரசரவென வழுக்கு மரம் உச்சி வரை ஏறிய பாலமுருகன் என்ற இளைஞர் பரிசு பொருளை தட்டிச் சென்றார். அவருக்கு முதல் பரிசாக ரூ.3001ம்¸ பித்தளை தவளை ஒன்றையும் தொழிலதிபரும்¸ திமுக பிரமுகருமான விஜயராஜ் வழங்கினார். இரவு வானவேடிக்கை முழுங்க¸ பஜனைகளுடன் ராதா ருக்குமணி சமேத ஸ்ரீ கோகுல கோபால கிருஷ்ணன் சாமி ஊர்வலம் நடைபெற்றது.
விழாவையொட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணன் தெரு மக்களும்¸ யாதவ இளைஞர் அணியினரும் செய்திருந்தனர்.