கீழ்பென்னாத்தூரில் உள்ள தனது ஆசிரமத்தில் 42வது அவதார நாளை கொண்டாடிய சர்ச்சை சாமியார் அன்னபூரணி தனது லவ்வை கொச்சைப்படுத்துவதா? என கோபமாக கேட்டார்.
திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள ராஜாதோப்பில் 1 ஏக்கர் இடம் வாங்கி ஆசிரமம் கட்டி வருகிறார் சர்ச்சை சாமியார் அன்னபூரணி.
அடுத்தவரின் கணவர் அரசு என்பவருடன் வாழ்ந்து வந்தது குறித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அவர் பங்கு கொண்டு விளக்கம் அளித்தார். பிறகு ஆன்மீகவாதியாக மாறிய அன்னபூரணி தனது பெயரை. அன்னபூரணி அரசு அம்மா என்று மாற்றிக் கொண்டார். தனிமனித ஒழுக்கம் இல்லாதவர்¸ மத நம்பிக்கைகளை இழிவு படுத்தி வருவதாக இந்து அமைப்புகள் சார்பில் அவர் மீது போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன இதையடுத்து செங்கல்பட்டு, சென்னை என அவர் நடத்திய நிகழ்ச்சிகளில் பிரச்சனைகள் ஏற்பட்டது.
இதையடுத்து ஆசிரமம் அமைக்கும் முடிவை எடுத்த அன்னபூரணி கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பில், தேவேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கி ஆசிரமம் கட்டி வருகிறார். எனது நிகழ்ச்சியை நடத்திட கல்யாண மண்டபத்தை தேடி அலைய வேண்டிய வேலையை மிச்சப் படுத்திய மீடியா சகோதரருக்கு நன்றி என்று தெரிவித்த அன்னபூரணி சொந்தமாக ஒரு இடம் வாங்கி உட்கார வைத்து விட்டீர்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.
புதிதாக கட்டப்படும் ஆசிரமத்தில் அடிக்கடி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் அன்னபூரணி தனது 42 வது அவதார நாளை இன்று கொண்டாடினார்.
உடல் முழுதும் மலர்கள் அலங்கரிக்கப்பட்ட நிலையில் அன்னபூரணி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கூடியிருந்த பக்தர்கள் அவர் மீதும்¸ அவரது பாதத்தின் மீதும் மலர்களைத் தூவி காலில் விழுந்து வணங்கினர். காவல்துறையை சேர்ந்தவர்களும் அவரை வணங்கினர். அப்போது அவர் இருக்கையிலிருந்து எழுந்து சிறிது நேரம் சாமி வந்து ஆடுவது போல் ஆடினார். சிறிது நேரம் கழித்து பெண் பக்தர் ஒருவரும் சாமி வந்து ஆடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு அன்னபூரணி அரசு அம்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது¸
என்னிடம் சரணாகதி அடைபவர்களின் நோய்¸ பிரச்சனை என எதுவாக இருந்தாலும் ஜீவன் முக்தி தன்மையில் நிலை பெற வைக்கிறேன். என்னை எந்த சக்தி இயங்குகிறதோ அந்த சக்தி¸ இந்த ஆசிரமத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். ஒரு யுகத்தில் ஒரு முறை இந்த இயற்கை சக்தி தோன்றும். மக்கள் என்ன தேவைக்கு வருகிறார்களோ அந்த தேவையை நிறைவேற்றுவதற்காக தான் அந்த இயற்கை சக்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. யுகத்திற்கு ஒரு தடவை அந்த சக்தி செயல்படும்.
போன் மூலம் தொடர்பு கொண்டாலே நோயை சரி செய்து வருகிறேன். எதிர்காலத்தை தான் ஆன்மீகம் என்று நினைக்கின்றனர். வருங்காலத்தை தெரிந்து கொண்டால் நிம்மதியாக இருக்க முடியுமா? மரணம் எப்போது என தெரிந்தால் நிம்மதியாக வாழ முடியுமா? அடுத்த நிமிஷம் என்பது நிரந்தரமா? எனவே இந்த நிமிடத்தை அனுபவித்து வாருங்கள். யாரோ ஒருவன் 4 பார்ட் 5 பார்ட் என படத்திற்கு கதை எழுதுற மாதிரி சொல்வான். அதை கண்ணால் பார்க்காமல் மீடியா எடுத்து போடுகிறது. நடந்த ஒரு நிகழ்வு¸ அது எதற்காக நடந்தது? உணர்வுபூர்வமான அந்த அன்பை எல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. எங்களுடைய லவ்வை கொச்சைப்படுத்தி பேசுகிறீர்கள். சித்தரித்துப் போடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரமத்தில் பக்தர்களுக்கு தருவதற்காக பராசக்தி என எழுதப்பட்டிருந்த அவரது போட்டோ வைக்கப்பட்டிருந்தது. மேலும் அன்னபூரணியுடன் வாழ்ந்து மறைந்த அரசு என்பவரின் சிலையும் ஆசிரமத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
தனது அவதாரநாளையொட்டி அன்னபூரணி அரசு அம்மா தனது பக்தர்களுக்கு வழங்கியிருந்த அருளாசி உரையில் யோகா மற்றும் தியானம் செய்பவர்கள் குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வேஷம் போடும் ஆன்மீகவாதிகளையும் அவர் ஒரு பிடி பிடித்துள்ளார்.
5 வருடமாக யோகம் செய்கிறேன் என்கிறார்கள் ஆனால் இன்னும் குண்டலினி சக்தியை எப்படி மேலேற்றுவது என்பது தெரியாமலும் அதன் மூலம் சக்கரங்களை எப்படி இயங்க செய்வது என்பது தெரியாமலுமே இருக்கிறார்கள். 8 வருடமாக தியானம் செய்கிறேன் என்கிறார்கள். எண்ணங்கள் அற்ற நிலை என்றால் என்ன என்ற அனுபவமே இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வகுப்புகளும் ஆன்மிகம் என்ற பெயரில் எண்ணங்களுடனும்¸ மனதுடனும் விளையாடும் விளையாட்டுகளே கற்றுக் கொடுக்கப்படுகிறது.
குண்டலினி அனுபவம் என்றால் ஆறு வருடம் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும் தாம்பத்யத்தில் ஈடுபடக்கூடாது என்றெல்லாம் உளறிக்கொண்டு இருக்கிறார்கள். தாம்பத்ய வாழ்க்கைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சில மாதங்களிலேயே சாதாரணமாக இதை ஒவ்வொருவருமே அனுபவிக்க முடியும்.
ஆன்மிகம் எப்பொழுதுமே உள்தன்மை சார்ந்ததாகவே இருக்கிறது. வெளியில் எந்த வேஷமும் அதற்கு தேவையில்லை. உள்தன்மையில் முழுமையாக நிலைபெற முடியாதவர்களே வெளியில் வேஷம் போட்டுக்கொண்டு தங்களை ஆன்மிகவாதிகளாக காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.