திமுகவைச் சேர்ந்த போளுர் சேர்மனின் கணவர் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைது செயயப்பட்டார். அவரது சொத்துக்களை ஆந்திர போலீசார் முடக்கியுள்ளனர்.
செம்மரகட்டை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சித்தூரில் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 100 செம்மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டது. தப்பியோடிய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான நபர்களில் ஒருவர் திமுக சேர்மனின் கணவராவார்.
இது பற்றிய விவரம் வருமாறு¸
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வேகமாக 4 கார்கள் வந்தன. அவற்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் செம்மரக்கட்டைகளை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செம்மரங்கள் தமிழகத்திற்கு கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. போலீசார் கார்களில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான 100 செம்மரக்கட்டைகளை கைப்பற்றினர். மேலும் ஒரு சொகுசு கார் உட்பட 4 கார்களை பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த திருவண்ணாமலை மாவட்டம் போளுர் பகுதியை சேர்ந்த பெருமாள் மற்றும் வேலு ஆகிய 2 பேர் பிடிபட்டனர். 8 பேர் தப்பியோடி விட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெருமாள் திருவண்ணாமலை மாவட்டம் போளுர் திமுக ஒன்றிய குழு தலைவர் சாந்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இரும்புலி ஊராட்சியை சேர்ந்தவர். இவர் மீது ஆந்திர மாநிலத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளது. செம்மர கடத்தல் வழக்கில் மிகப்பெரிய ஆளாகவும்¸ தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவராகவும் விளங்கி வந்த பெருமாள் சுமார் ரூ. 300 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது சொத்துக்களை ஆந்திர போலீசார் முடக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்புலன்சில் செம்மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டதில் கைதான பெருமாளுக்கு தொடர்பு உள்ளதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.