நடிகை நயன்தாரா திருமணத்தை யொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர்¸ மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
7 ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக கண்ணாடி மாளிகையில் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்தேறியது. இந்த திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர்¸ முக்கிய பிரமுகர்கள்¸ நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். 19 புரோகிதர்கள் மந்திரம் ஓத நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக் கொடுத்த தாலியை நயன்தாரா கழுத்தில் கட்டுகிற புகைப்படங்களை விக்னேஷ்சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியானது. வெளிநாடு மற்றும் இந்தி நடிகர்களின் பாணியில் தமிழகத்தில் முதன்முறையாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்திற்காக தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கியுள்ள முதியவர்கள்¸ குழந்தைகளுக்கு சாப்பாடு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள உதவும் கரங்கள்¸ கீழ்பென்னாத்தூரில் உள்ள ரீட்ஸ் கிராமப்புற கல்வி மற்றும் மேம்பாட்டு சங்கம்¸ மேக்களுர் ஆஞ்சலோ மன வளர்ச்சி குன்றிய ஆண்களுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் சேத்துப்பட்டு¸ போளுர் என 5 இடங்களில் தங்கியுள்ள ஆதரவற்ற குழந்தைள்¸ மாணவ-மாணவியர்கள்¸ முதியவர்கள்¸ மாற்றுத் திறனாளிகள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடு குழுவினர்களால் விருந்து அளிக்கப்பட்டது. முன்னதாக அவர்கள் ஒன்றாக நின்று கோரசாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு திருமண நல்வாழ்த்துக்கள் என கைதட்டி மகிழ்ச்சியுடன் கூறினர்.