திருவண்ணாமலையில் புதிய பஸ் நிலையத்திற்காக பெட்ரோல் பங்க் செயல்பட்டு வந்த இடம் விலை பேசப்படுகிறது. தூய்மை பணியாளர்களுக்கு மாற்று இடமும் தயாராக உள்ளது.
திருவண்ணாமலை – திண்டிவனம் ரோட்டில் உள்ள டான்காப் எனப்படுகிற எண்ணெய் பிழியும் தொழிற்சாலை 25 ஆண்டுகளுக்கு முன் நஷ்டத்தின் காரணமாக மூடப்பட்டு விட்டது. தற்போது அந்த ஆலை இயங்கிய இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண்மை துறையிடம் இருந்த 6 ஏக்கர் நிலம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து 10 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு வியாபாரிகள் உள்பட பெரும்பாலானவர்களுக்கு விருப்பம் இல்லாமல் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் ஈசான்யத்தில் பஸ் நிலையம் அமைப்பதற்கு கருத்து கேட்பு கூட்டத்தை கலெக்டர் நடத்தினார். இதே போன்ற கருத்து கேட்பு கூட்டம் இந்த புதிய இடத்தில் அமைப்பதற்கு நடத்தப்படவில்லை என்பது அவர்களின் ஆதங்கமாக உள்ளது.
டான்காப் இடத்தில் பஸ் நிலையம்
அதிமுக ஆட்சி காலத்தில் சுடுகாடு¸ குப்பை கிடங்கு அருகே பஸ் நிலையம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. கிரிவலப்பாதையிலேயே பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது தவறானதாகும். எனவேதான் புதிய பஸ் நிலையம் டான்காப் இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது என அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்திருந்தார்.
புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை சில மாதங்களுக்கு முன்பு அவர் ஆய்வு செய்ய வந்த போது அந்த இடத்தின் அருகில் காமராஜர் நகரில் வசித்து வரும் 60 குடும்பங்களைச் சேர்ந்த நகராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களுடைய வீடுகளை இடிக்க கூடாது என மனு அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமரசப்படுத்தி காலி செய்திட ஏற்பாடு செய்யுமாறு அப்பகுதி கவுன்சிலர் மற்றும் திமுக பொறுப்பாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் 30 வருடங்களாக சிறுக¸ சிறுக சேர்த்த பணத்தை கொண்டு கட்டிய வீடுகளை இடிக்க விட மாட்டோம் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பணியாளர்களுக்கான மாற்று இடம் |
இந்நிலையில் அவர்களுக்காக டான்காப் பின்புறம்¸ ரெயில்வே லைன் அருகில்¸ பல்லவன் நகருக்கு செல்லும் வழியில் அரசு புறம்போக்கு இடத்தில் மாற்று இடம் அமைக்கப்பட்டு கால்வாய் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த நகருக்கு செல்லும் வகையில் அகலமான ரோடும் போடப்பட்டுள்ளது. இதை நேற்று முன்தினம் அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கலெக்டர் முருகேஷ்¸ அண்ணாதுரை எம்.பி உடனிருந்தனர். தூய்மை பணியாளர்களை அழைத்து வந்து இடத்தை காட்டுங்கள்¸ அவர்களது கருத்துக்கேற்ப இடத்தை தாருங்கள் என அமைச்சர் அங்கிருப்பவர்களிடம் கூறினார்.
விலைக்கு பெட்ரோல் பங்க்
மேலும் புதிய பஸ் நிலைய முகப்பை விஸ்தாரமாக அமைக்க டான்காப் முன்புறம் உள்ள பெட்ரோல் பங்க்கை விலை பேசவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது அந்த பெட்ரோல் பங்க் செயல்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு இந்த பெட்ரோல் பங்க்கை அமைச்சர் எ.வ.வேலு¸ பாலத்தின் மீது சென்று பார்வையிட்டார்.
பெட்ரோல் பங்க் |
அமைச்சர் பார்வை |
இந்த பணிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வருவதற்குள் முடிந்து விடும் என்றும்¸ புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகளை முதல்வர் அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது.