திருவண்ணாமலையில் கஞ்சா போதையில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திருவண்ணாமலையில் போளுர் ரோடு தமிழ்நாடு ஓட்டல் எதிரில் பச்சையம்மன் கோயில் தெருவுக்கு முன்பாக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். அவர் கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. வருவோர்¸ போவோரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த வந்த தண்டராம்பட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000-த்தை பிடுங்கி கொண்டாராம். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் வந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
போலீசார் பிடித்து அழைத்து வந்த போது அங்கிருந்தவர்களை அந்த வாலிபர் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். உடனே போலீசார் அந்த வாலிபரை போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். ஆனாலும் அந்த வாலிபர் அடங்காமல் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கினார். இதனால் ஜீப்பிலும் அவருக்கு அடி விழுந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த வாலிபர் பெயர் சந்துரு(23) என்றும்¸ சிவசக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். இது சம்மந்தமாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.