திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம் என பாஜக தெரிவித்திருந்த நிலையில் இன்று அந்த இடத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது.
இப்பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார்.
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்லும் பாதையையும்¸ வேலூர் செல்லும் ரோட்டையும் இணைக்கும் பகுதியில் தனியார் இடத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்று வந்தது. இதற்காக 98 சதுர அடி உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான இடத்தை வாங்கி அதை சுற்றிலும் இரும்பு தகடுகளை மறைவாக அமைத்து திமுகவினர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கருணாநிதி சிலை கட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும்¸ கட்டுமானம் நடைபெற்றால் அப்பகுதியில் உள்ள கால்வாயில் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவே சிலை அமைக்க தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ந் தேதி சிலை நடைபெற இருந்த சிலை திறப்பு விழா தள்ளி போனது. இந்நிலையில் இந்த வழக்கை தொடர்ந்த கார்த்திக் என்பவர் மேற்கண்ட இடத்திற்கு பட்டா வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதால் இந்த வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் தெரிவித்ததை அடுத்து நீதிபதிகள் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர். கருணாநிதி சிலை அமைப்பதற்கான தடை நீங்கியதால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேற்கண்ட இடத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படுவதை எதிர்த்து பாஜக சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என திருவண்ணாமலைக்கு நேற்று வந்திருந்த பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்திருந்தார். இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இடத்தில் சிலை எப்படி வைக்க முடியும் என கேள்வி எழுப்பிய எச்.ராஜா ஆன்மீகவாதிகள் கிரிவலம் செல்லும் பாதையில் நாத்திகவாதிக்கு எதற்கு சிலை¸ சாமி கும்பிட வரும் பக்தர்கள் இவரது முகத்தில் முழிக்க வேண்டுமா? என காட்டமாக கேட்டிருந்தார்.
கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்கான ஆரம்ப கட்ட பணி நடைபெற்ற போதே அதிமுகவும்¸ பாஜகவும் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தன. இது பற்றி சமூக வலைதளங்களில் விவாதமே நடந்தது. இந்நிலையில் எச்.ராஜாவின் பேட்டி திமுகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தனியார் இடத்தை கிரயம் வாங்கி சிலை வைத்திருப்பதால் எந்த வழக்கும் தங்களை பாதிக்காது என்றும்¸ ஸ்டாலின் கையால் சிலை திறக்கப்படுவது உறுதி என்றும் திமுகவினர் தெரிவித்தனர்.
பாஜகவின் நடவடிக்கை காலம் கடந்த செயல்¸ கார்த்திக் என்பவர் எந்த நோக்கத்திற்காக வழக்கை வாபஸ் பெற்றார் என்பது தெரியாது¸ அவர் வழக்கு போடும் போதே பாஜக சார்பிலும் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
எச்.ராஜாவின் பேட்டியை அடுத்து நேற்று இரவு திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு திரும்பி வந்த அமைச்சர் எ.வ.வேலு¸ சிலை அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களிடமும்¸ கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று காலை முதல் அந்த இடத்தில் பீடம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. பிறகு கிரேன் மூலம் பீடத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது. கலைநய மிக்க பீடத்தோடு சேர்த்து சிலை 30 அடி உயரத்திற்கு அமைந்துள்ளது.
சிலை நிறுவப்பட்டுள்ளதை அமைச்சர் எ.வ.வேலு¸ இன்று பகல் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், எ.வ.வே.கம்பன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கருணாநிதி சிலையையும்¸ புதியதாக கட்டப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலையும் திருவண்ணாமலைக்கு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் 10ந் தேதிக்குள் வர உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வைக்க உள்ளார்.