திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் 48 மணி நேரம் விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த ரெய்டின் பின்னணி குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலை வேங்கிக்காலில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் என்ற ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் 2 பால் குளிரூட்டும் நிலையங்களும்¸ 572 பால் சொசைட்டிகளும் இயங்கி வருகிறது. இதன் மூலம் தினமும் 2 லட்சத்து 83 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆவினில் செயல்பட்டு வரும் விஜிலென்ஸ் பிரிவின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி¸ துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியசீலன் மற்றும் போலீசார் திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்தில் நேற்று முன்தினம் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
விற்பனை மற்றும் உற்பத்தி பிரிவு¸ கணக்கு பிரிவு ஆகிய ஆவணங்களை பலமணி நேரம் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து பொது மேலாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சோதனை நேற்று மாலை வரை நீடித்தது. ஏறக்குறைய 48 மணி நேரம் கணக்குகளை அலசி ஆராய்ந்ததோடு பொது மேலாளர் ராஜாகுமாரை துருவி துருவி விசாரித்தனர்.
பொது மேலாளர் பயன்படுத்தும் சங்கத்தின் காரில் விதிமுறையை மீறி ஜி(கவர்மெண்ட) என எழுதி பயன்படுத்தப்பட்டு வந்தது குறித்தும்¸ பெரும்பாலும் அவரது சொந்த பயன்பாட்டிற்காக அந்த கார் பயன்படுத்தப்பட்டு வந்தது குறித்தும் புகார்கள் சென்றனவாம். இந்த வாகனத்திற்கு டீசல் போட்டதாக பல லட்சங்களை முறைகேடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரே மாதத்தில் 4 ஆயிரம் லிட்டர் டீசல் பயன்படுத்தப்பட்டிருப்பததை பார்த்து விஜிலென்ஸ் அதிகாரிகள் திகைத்தனர். மேலும் ஒரு நாளைக்கு 1700 லிட்டர் பால் கணக்கில் வராமல் வெளியில் விற்பனை செய்யப்பட்டது குறித்த புகாரின் பேரிலும் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
5 தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு அனுமதி வழங்காமலும்¸ பால் உற்பத்தியாளர்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் இருந்து இழுத்தடித்து வந்ததாக சொல்லப்பட்ட புகார்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது.
ராஜாகுமார் |
இது சம்மந்தமாக சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை பால்வள துணைப்பதிவாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பொது மேலாளர் ராஜாகுமார்¸ பால்வள துணை பதிவாளர் சந்திரசேகர ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
இந்த சோதனையின் போது சம்மந்தமே இல்லாமல் சங்கத்தின் கார்¸ உளுந்தூர்பேட்டை¸ சமயபுரம் அடிக்கடி சென்று வந்ததற்கான ஆவணங்களையும் சம்மந்தப்பட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடியில் திரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. நேற்று மாலை சோதனைகள் நிறைவடைந்ததும் ஒரு பை நிறைய ஆவணங்களோடு விஜிலென்ஸ் போலீசார் புறப்பட்டு சென்றனர். சோதனை அறிக்கை ஆவின் நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கப்படும் என்றும்¸ அதன் பிறகே நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரும் ஆவினில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அவர்கள் திருவண்ணாமலை ஆவின் பொது மேலாளர் ராஜாகுமாரிடமும் கடந்த மார்ச் மாதம் விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.