திருவண்ணாமலையில் மனநலம் குன்றியவரை ரூமில் அடைத்து விட்டு 68 பவுன் நகையை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரில் அரசு மண் பரிசோதனை நிலையம் பின்புறம் உள்ளது திருமலை நகர். இங்கு முதல் தெருவில் வசித்து வருபவர் சுமதி (வயது 50). கணவர் நடேசன் இறந்து விட்டார். இவர்களது முதல் மகன் ராஜேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருக்கிறார். இரண்டாவது மகன் விவேக் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சுமதி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணி புரிந்து வருகிறார்.
நேற்று விவேக்¸ வெளியூர் சென்று விட அவரது மனைவி சசிகா¸ கடலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் தனியாக இருந்த ராஜேஷை வீட்டிலேயே வைத்து பூட்டி விட்டு சுமதி அரசு மருத்துவமனைக்கு இரவு பணிக்காக சென்று விட்டார். இன்று காலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது பார்த்து பதறி போய் உள்ளே சென்று பார்த்தார். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் இருந்த காசிமாலை¸ நெக்லஸ்¸ செயின் உள்பட 68 பவுன் நகைகளும்¸ ரூ.4 லட்சம் மதிப்புள்ள வைரத்தால் ஆன மோதிரம்¸ நெக்லஸ் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களும்¸ ஒன்றரை லட்ச ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கிருந்த ராஜேஷை பார்த்து திடுக்கிட்டனர். ராஜேஷ் மனநலம் குன்றியவர் என்பதை கண்டுபிடித்து அவரை ரூமில் அடைத்து பூட்டி விட்டு கொள்ளையை சாவகாசமாக அரங்கேற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து சுமதி திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் சமீப காலமாக நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ந் தேதி சாரோனில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை போனது. மறுநாள் கிளிப்பட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் திருடு போனது. கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.