திருவண்ணாமலை சிவாஞ்சி குளத்தில் உள்ள சிவன் கோயில் கருவறை மீது கட்டிடம் கட்ட டிரில்லிங் மிஷினால் துளை போடப்பட்டதை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அருகில் உள்ளது சிவாஞ்சி குளம். இது அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அண்ணாமலையார் கோயிலின் 5ம் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை குளத்திலிருந்து தண்ணீர்¸ சிவாஞ்சி குளத்திற்கு செல்லும் வகையில் குளத்திற்கு அடியில் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் பெய்த மழையில் 45 வருடத்திற்கு பிறகு சிவாஞ்சி குளம் நிரம்பி வழிந்தது.
இக் குளத்தின் தண்ணீரை தலை மீது தெளித்துக் கொண்டால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த சிவாஞ்சி குளத்தின் கரையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. சிவன் கோயில் கருவறை அமைந்த பகுதி தனியார் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. தென் ஒத்தவாடைத் தெருவிலிருந்து இந்த கருவறை மீதுள்ள பாதை ஆனைகட்டித் தெருவுக்கு செல்கிறது.
இந்நிலையில் கருவறைக்கு மேல் உள்ள இடத்தில் கட்டிடம் கட்டும் முயற்சியில் இடத்தின் உரிமையாளர்கள் இறங்கினர். இதற்கு இந்து அமைப்புகள்¸ சுற்றுப்பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி இன்று காலை ஜே.சி.பி எந்திரத்தை கொண்டு இடம் சீர்படுத்தப்பட்டது. மேலும் கோயில் கருவறை மீதுள்ள தளத்தை பெயர்த்து எடுப்பதற்காக டிரில்லிங மிஷினால் துளை இடப்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும்¸ வியாபாரிகளும்¸ பக்தர்களும் கோயில் கருவறையை எப்படி இடிக்கலாம் என கேள்வி எழுப்பி வேலையை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் திருவண்ணாமலை நகர போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கோயில் கருவறை மீது விமானம் அமைக்கும் முயற்சி நடைபெற்று வருவதால் அப்பகுதியை விட்டு விட்டு மற்ற பகுதிகளில் கட்டுமான பணிகளை செய்யட்டும் என பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அண்ணாமலையார் கோயில் இணை ஆணையாளர் கே.பி.அசோக்குமார் உத்தரவின் பேரில் அங்கு வந்த கோயில் ஊழியர்களிடம் சுற்றுச்சுவர் கட்ட இடம் சீர்படுத்தப்பட்டதாக இடத்தின் உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளாத கோயில் ஊழியர்கள் மறு உத்தரவு வரும்வரை மேற்கொண்டு எந்த பணியை செய்யக் கூடாது என இடத்தின் பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி கதவுகளை இழுத்து மூடி பூட்டு போட்டு விட்டு சென்றனர்.
இந்த குளத்தின் அருகில்தான் அண்ணாமலையாரின் மறுஉருவம்¸ சித்தர்களுக்கு எல்லாம் சித்தர் என அழைக்கப்படும் தவபாலேஸ்வரர் சமாதி அமைந்திருப்பதாக கோயமுத்தூர் ஸ்ரீநந்தீஸ்வரர் ஞானபீடத்தைச் சேர்ந்த சுவாமி சித்தகுருஜி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.