தான் விருது வாங்குவதற்காக செயல்படவில்லை என்றும்¸ எப்ப வந்தாலும் விருது வாங்கறீங்க என தலைமை செயலாளரே கேட்டதாகவும் கலெக்டர் கூறினார்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் 7 நாட்களாக நடைபெற்று வந்த ஜமாபந்தி இன்றுடன் முடிவடைந்தது. மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். ஜமாபந்தியில் மொத்தம் 1223 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 549 மனுக்கள் ஏற்கப்பட்டது. 606 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 68 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஜமாபந்தியின் நிறைவு நாளான இன்று விவசாயிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அனைவரையும் தாசில்தார் எஸ்.சுரேஷ் வரவேற்றார். கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் திட்ட விளக்கவுரையாற்றினார்.
இதில் சி.என்.அண்ணாதுரை எம்பி¸ பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவுக்கு தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வருவாய்துறை மூலம் முதியோர் உதவித்தொகை இயற்கை மரணம் இலவச வீட்டு மனை பட்டா எஸ்டி சாதிச்சான்று உட்பிரிவு முழுபுலம் பட்டா மாற்றம் மற்றும் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் உள்பட 559 பயனாளிகளுக்கு ரூ.63.73 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் நகரமன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம் வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன் வட்ட வழங்கல் அலுவலர் ப.முருகன், சமூக பாதுகாப்பு வட்ட துணை ஆய்வாளர் சையத்ஜலால்¸ ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.எஸ்.லட்சுமி¸ விஜயலட்சுமி¸ மண்டல துணை வட்டாட்சியர் மணிகண்டன்¸ கிராம நிர்வாக அலுவலர்கள் அ.ஏழுமலை¸ விஜயராஜ்¸ கட்சி சார்பற்ற விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஜெ.சிவா¸ தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கார்கோணம் சந்திரசேகரன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள்¸ உள்ளாட்சி பிரதிநிதிகள்¸ பொதுமக்கள்¸ பயனாளிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் க.அமுல் நன்றி கூறினார்.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் பேசியதாவது¸
15 வருடங்களாக கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மனுக்கள் வருகின்றன. நமது ஆட்கள்தான்¸ நாம் தினமும் பார்க்கிறவர்கள் தான் இந்த ஆக்கிரமிப்பை செய்கின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் 1 வருடத்திற்குள் அகற்றப்படும் என உறுதியளிக்கிறேன். ஜமாபந்தியில் அரசு புறம்போக்கு நிலங்கள் எவ்வளவு இருக்கின்றன¸ தற்போது அவை எந்த நிலையில் உள்ளது என்பதை கணக்கு எடுத்தோம். இரண்டாவதாக டிசி லேண்ட்டை பற்றி ஆய்வு செய்தோம். 10 சர்வே எண்ணில் உள்ள டிசி லேண்டில் விதிமீறல் இருப்பதாக எழுதி இருக்கின்றனர். எனவே அவற்றை ரத்து செய்துவிட்டு அரசு கணக்கில் சேர்க்க உத்தரவிட்டு இருக்கிறேன். நானே கைப்பட எழுதி இருக்கிறேன்.மீற முடியாது.
நான் விருதுக்காக செயல்படவில்லை. தலைமை செயலகத்தில் சீஃப் செகரட்டரி எப்ப வந்தாலும் விருது வாங்குறீங்க என்று கேட்டார்.விருதை நோக்கி போகாதீர்கள் என்று கூறியவர் மற்ற மாவட்டங்களை காட்டிலும் நல்லது செய்வதால்தான் உங்களை அங்கீகரிக்கிறார்கள் என்றும் கூறினார். ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலமும்¸ சுற்றுச்சூழல் பசுமை விருதின் மூலமும் திருவண்ணாமலை மாவட்ட சிறந்த மாவட்டமாக திகழ்கிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள் அனைவரும் நிலத்திற்கு சென்று பார்த்துவிட்டு கிராம கணக்குகளை எழுத வேண்டும். அதுமட்டுமின்றி¸ வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு¸ அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு எந்த மாவட்டத்திலும் செய்யாத வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் 25 ஏக்கர் பரப்பளவில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தினை¸ தண்ணீர் வசதி ஏற்பாடு செய்தும்¸ பண்ணைக்குட்டைகள் அமைத்தும்¸ வரப்புகள் அமைத்து¸ மின் இணைப்பு வழங்கி மாட்டு தீவனம் பயிட ஏற்பாடு செய்தும்¸ ஒரு வட்டங்களுக்கு 2 ஏக்கர் என்ற அளவில் 18 வட்டங்களில் 36 ஏக்கர் மாட்டு தீவனம் பயிரிடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
மீண்டும்¸ ஒரு வட்டங்களுக்கு 2 ஏக்கர் என்ற அளவில் 18 வட்டங்களில் 36 ஏக்கர் பரப்பளவிற்கு தோட்டக்கலை துறையின் சார்பில் செடிகள்¸ பூக்கள்¸ பழங்கள்¸ மாட்டு தீவனம் அமைத்தும்¸ இன்டகிரேட்டடு பார்க் அமைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். மேலும்¸ ஜவ்வாது மலையில் 15 ஏக்கர் பரப்பளவில் தேனி பூங்காக்கள் அமைப்பதற்கும்¸ தண்ணீர் வசதி ஏற்பாடு செய்து¸ தோட்டக்கலை துறையின் அதிகாரிகள் மூலம் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து¸ எந்த செடியில் தேன் அதிகமோ அந்த மாதிரியான செடிகள் 2500 நட உள்ளோம். மீதமுள்ள இடங்களில் வண்டிகளை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தும்¸ வறண்ட பகுதியில் உள்ள இரண்டு மலைக்குன்றுகளை பசுமை படுத்துகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.