திருவண்ணாமலையில் இரண்டு பிரபல சூப்பர் மார்க்கெட்டுகளின் லைசன்சை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
திருவண்ணாமலை பஜாரில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று மாலை திடீரென சென்றார்கள். அப்போது அங்கு கஸ்டமர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்தனர். அவர்களை பொருட்களை வாங்கிக் கொண்டு சீக்கிரம் வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். என்னவோ ஏதோ என்று தெரியாமல் கஸ்டமர்கள் அவசரம்¸ அவசரமாக வெளியேறினார்கள். பிறகு பணியாளர்களை அழைத்து கடையை பூட்ட போகிறோம். எனவே கடைக்கு வெளியே உள்ள பொருட்களை எடுத்து உள்ளே வைத்துக் கொள்ளுமாறும் கூறினர்.
முதலாவதாக தேரடித் தெருவில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் பணியாளர்களை வெளியேற்றிவிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையின் கதவுகளை மூடி பூட்டு போட்டனர்.
2014ஆம் ஆண்டு அந்த கடையில் விற்கப்பட்ட குஷி ஆயிலின் மாதிரி எடுத்துச் செல்லப்பட்டதில் அந்த ஆயில் பயன்படுத்த தகுதியற்றதாக இருப்பதை கண்டுபிடித்து விதிமீறலுக்காக மாவட்ட வருவாய் அதிகாரியால் ரூ 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதை உரிமையாளர் கட்டாததால் கடையை பூட்டி இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் அந்த கடையின் உணவு வணிக உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக கூறினர்.
இதே போல் திருவூடல் தெருவில் உள்ள ஒரு பிரபல சூப்பர் மார்க்கெட்டிலும் வாடிக்கையாளர்களையும்¸ பணியாளர்களையும் வெளியேற்றி விட்டு கடையை மூடி பூட்டு போட்டனர். அந்த கடையில் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் தயாரிப்புகளான டைமன் கற்கண்டு¸ ஜவ்வரிசி போன்றவை பயன்படுத்த தகுதியற்றவை என கண்டுபிடிக்கப்பட்டதால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தொகையை அவர்கள் கட்டாததால் அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இது சம்மந்தமாக அந்த கடையின் உரிமையாளருக்கும்¸ கடையின் மேலாளர் புஷபாவுக்கும் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். மேலும் அந்த கடையின் உணவு வணிகத்தின் உரிமையையும் தற்காலிகமாக ரத்து செய்தனர். அபராத தொகையை கட்டாத வரை இரண்டு சூப்பர் மார்க்கெட்டுகளால் உணவு வணிகத்தை தொடர இயலாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன்¸ திருவண்ணாமலை நகர உணவு பாதுகாப்பு அலுவலர் எழில்சிக்கையராஜா¸ ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் கலேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.