திருவண்ணாமலையில் முதன்முதலாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 8 கோயில்களின் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் இறைவன் குடிகொண்டிருக்கும் கோயில்கள் பல உள்ளன. இப்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் திருவண்ணாமலைக்கு பெருமை சேர்த்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் திருவண்ணாமலை கீழ்நாத்தூரில் 500 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் குல தெய்வமாக விளங்கும் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தன்னைச் சுற்றிலும் 7 கோயில்களை உள்ளடக்கி பக்தர்களை பிரமிக்க வைத்துள்ளது.
திருவண்ணாமலை வேட்டவலம் ரோடு, புதிய பைபாஸ் சாலை அருகில்தான் இந்த பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. கடைசியாக இந்த கோயிலுக்கு 2009ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முனீஸ்வரன் கோயிலும் அங்கு இடம் பெற்றிருந்தது. இந்த கோயில்களை புனரமைக்கும் பணியும், புதியதாக கோயில்கள் அமைக்கும் பணியும் சுமார் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வந்தன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஒரே இடத்தில் அமைந்துள்ள 8 கோயில்களின் கோபுர கலசங்களுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார் பெரிய பட்டம் தி.கார்த்திகேய ஈசான சிவாச்சாரியார் தலைமையில் குருக்கள்கள் ஒரே நேரத்தில் புனித நீரை தெளித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 8 கோயில்களின் கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயில்கள்
1) ஸ்ரீமுத்தாலம்மன் |
2) ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி |
3) ஸ்ரீஅண்ணாமலையார் |
4) ஸ்ரீஉண்ணாமலையம்மன் |
5) ஆஞ்சநேயர் |
7) லட்சுமி மகா கணபதி, |
8) காலபைரவர் |
கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 22ந் தேதி முதல் தொடங்கின. அன்று விநாயகர், கணபதி லசஷ்மி பூஜை, ஹோமம், கோபூஜை, புதிய சிலைகளுக்கு ஸ்தூபி கலச பூஜை ஆகியவை நடந்தது. நேற்று 23ந் தேதி கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜையும் நடந்தது. இன்று 24ந் தேதி அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை, கடம் புறப்படுதல் நடைபெற்றது.
கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து 10.30 மணிக்கு மூலஸ்தான கருவறை தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 11 மணிக்கு மகா அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவர்களுக்கு விசேஷ அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வடை, பாயாசத்துடன் உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் டிஸ்கோ குணசேகரன், அண்ணாமலை மற்றும் விழா குழுவினர், கீழ்நாத்தூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
நாளை 25ந் தேதி முதல் அடுத்த மாதம் 8ந் தேதி வரை மண்டலாபிஷேகம் நடைபெறும் என்றும், 9ந் தேதி முத்தாலம்மனுக்கு காப்பு கட்டுதலும், 12ந் தேதி கூழ் வார்க்கும் திருவிழாவும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேறு எங்கும் இல்லாத நிலையில் ஒரே இடத்தில் 8 கோயில்கள் அமைய பெற்றுள்ளது திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராம மக்களை பரவசமடையச் செய்துள்ளது.