தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள், அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன் படத்தை பரிசாக வழங்கினார்கள்.
திருவண்ணாமலைக்கு இன்று வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்¸ கருணாநிதி சிலையையும்¸ அண்ணா நுழைவு வாயிலையும் திறந்து வைத்தார். முன்னதாக அவர் பெரிய தெருவில் நடைபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்களை கவுவரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவரை¸ கோயில் சிவாச்சாரியார்கள்¸ ” தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின் நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர் ஆடிப் பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப்போம் நமது உள்ள வினைகளே” என்ற பாடலை பாடி பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். அப்போது ஸ்டாலின் கும்பத்தை தொட்டு சிவாச்சாரியார்களை பார்த்து வணங்கினார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடைக்கு ஸ்டாலின் சென்றார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு¸ நமக்கு நாமே எனும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உங்களை சந்தித்தார். 6 ஆண்டுக்கு முன் நடந்ததை அவர் ஞாபகம் வைத்துக் கொண்டு உங்களை சந்திக்க வேண்டும் என்று சொன்னதால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்(ஸ்டாலின்) மூலமாகத்தான் தலைவர் கருணாநிதி ஆட்சியில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்(தொல்பொருள் துறையிடமிருந்து) மீட்டுத் தரப்பட்டது என்று குறிப்பிட்டார்.
மேடையில் ஸ்டாலினுக்கு¸ சிவாச்சாரியார்கள் சால்வையை அணிவித்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பிரசாதத்தை வழங்கினார்கள். அண்ணாமலையார்- உண்ணாமலையம்மன் படத்தையும் பரிசாக தந்தனர். படத்தை குனிந்து பார்த்த ஸ்டாலின் புன்னகைத்தவாரே பெற்றுக் கொண்டார்.
அதன்பிறகு ஹாலாசநாத குருக்கள்¸ தியாகராஜ குருக்கள் உள்பட 10 மூத்த சிவாச்சாரியார்களுக்கு¸ முதல்வர் ஸ்டாலின்¸ பரிசுகளை வழங்கினார். வயதான சிவாச்சாரியார்களில் சிலர் மேடை ஏற சிரமப்பட்டதால்¸ ஸ்டாலினே மேடையிலிருந்து கீழே இறங்கி பரிசுகளை வழங்கினார். ஒவ்வொரு பெயராக அமைச்சர் எ.வ.வேலு வாசித்தார். அப்போது அவர்¸ பிராமணர்கள் அழைப்பது போல் வாங்கோ எனவும்¸ வாங்கோண்ணா எனவும் சிவாச்சாரியார்களை அழைத்தார்.
பிறகு ஸ்டாலின் நடந்து சென்று அனைத்து சிவாச்சாரியார்களையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தார். ஒரு சிறுமியை பெயர் என்ன?¸ என்ன படிக்கிறீங்க என விசாரித்தார். சிலருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதன் பிறகு கருணாநிதி சிலை திறப்புக்கு புறப்பட்டு சென்றார்.
மொத்தம் 300 சிவாச்சாரியார் தம்பதியினருக்கும்¸ 100 பிரம்மச்சாரி சிவாச்சாரியார்களுக்கும் பட்டு புடவை¸ பட்டு வேட்டி மங்கல பொருட்கள்¸ குங்குமச் சிமிழ்¸ சிவபூஜை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு “ஆதி சைவர் சிவாச்சாரியார்களுடன் கலந்துரையாடல்” என மேடையில் எழுதப்பட்டிருந்தது.