Homeசெய்திகள்ஓடை மீது போடப்பட்ட ரோடு- ஆய்வுக்கு சென்ற கலெக்டர் அதிர்ச்சி

ஓடை மீது போடப்பட்ட ரோடு- ஆய்வுக்கு சென்ற கலெக்டர் அதிர்ச்சி

ஓடை மீது ரோடு- ஆய்வுக்கு சென்ற கலெக்டர் அதிர்ச்சி

ஓடை மீது ரோடு போடப்பட்டிருப்பததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர், ஆக்கிரமிப்பை அகற்ற தைரியம் வேண்டாமா? அதிகாரிகளிடம் கோபமாக கேட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் இன்று (12.07.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை அருகே செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செ.அகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.4.83 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை (செக்டேம்), காளியம்மன் கோவில் – பெரும்பாக்கம் சாலை வரை ரூ.12.67 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக போடப்பட்டுள்ள சாலை பணியையும் ஆய்வு செய்தார். 

ஓடை மீது ரோடு- ஆய்வுக்கு சென்ற கலெக்டர் அதிர்ச்சி

அப்போது சாலைக்காக ஓடையின் ஒரு பகுதி மீது மண் கொட்டி மூடப்பட்டிருப்பதை பார்த்து கலெக்டர் முருகேஷ் அதிர்ச்சி அடைந்தார். ஒடையை அகலப்படுத்துவதை விட்டு விட்டு ஏன் சிறியதாக்குகிறீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ஓடை புறம்போக்கை ஒருவர், ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால் ரோடு போட இடம் இல்லை என்று பதிலளித்தனர். இதனால் டென்ஷனான கலெக்டர், அதற்காக ஓடையை மண் கொட்டி மூடுவீர்களா? ஓடையை அகலப்படுத்தி விட்டுதான் சாலை பணியை முடிக்க வேண்டும். இல்லையென்றால் என்ஜினீயர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். அதற்கு அதிகாரிகள், ஆக்கிமிப்பை அகற்ற சென்றால் ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்துள்ள நபர் தகராறு செய்வதாக கூறினர். 

ஓடை மீது ரோடு- ஆய்வுக்கு சென்ற கலெக்டர் அதிர்ச்சி
அதிகாரிகளுக்கு எச்சரிக்கை 

இதனால் மேலும் கோபமான கலெக்டர், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற ஏன் உங்களுக்கு தைரியம் இல்லை?, இடம் இல்லாதவர்கள் குடிசை போட்டிருந்தால் கொஞ்சமாவது இரக்கம் வந்திருக்கும், ஆனால் இந்த ஆக்கிரமிப்பாளர் விவசாயம் செய்து சம்பாதித்து கொண்டிருக்கிறார். இடத்தை தராவிட்டால் அவரை குண்டு கட்டாக தூக்கி அரெஸ்ட் செய்திடுவேன் என எச்சரித்தார். அப்போது ஆக்கிரமிப்பு செய்தவர் அங்கு இல்லை. 

பிறகு மேநீர் தொட்டி, துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார நிலையத்தை சுற்றி வரும் 3ந் தேதிக்குள் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் மாவட்டத்தில் 500 புதிய அங்கன்வாடிகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே செ.அகரம் கிராமத்திலும் பழுதடைந்துள்ள அங்கன்வாடிக்கு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை தொடர்ந்து பெரியகோளாபாடி பகுதியில் உள்ள கல்குவாரியை பார்வையிட்டார். அங்கு அரசின் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பான முறையில் பணிகள் நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். 

பிறகு செய்தியாளர்களிடம் கலெக்டர் முருகேஷ், கூறுகையில், மாவட்டத்தில் 88 கல்குவாரிகள் உள்ளது என்றும், இதில் 9 குவாரிகள் செயல்படவில்லை என்றும், 79 குவாரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு முன்னுரிமை அடிப்படையில் ஊராட்சிகளுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருவதாகவும், செயல்படாத குவாரிகள் நீர்நிலையமாக மாற்றப்படும் என்றும், அங்கு பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

பெரியகோளாப்பாடி ஊராட்சியில்  கட்டப்பட்டுவரும் சுற்றுசுவருடன் கூடிய தகன மேடை அமைக்கும் பணியினையும் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகட்டும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உச்சிமலைக்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சிமெண்ட் கான்கீரிட் கல்வெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கரியமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி.கே.சாலை முதல் சுண்டக்காய்பாளையம் வரை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் மேல்பென்னாத்தூர் ஊராட்சியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளையும் நேரில் சென்று பார்iவியிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செங்கம் பேரூராட்சியில் 15 வது நிதிக்குழு மான்யத்திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் புதிய பூங்கா  அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டார்.

இதனைத் தொடர்ந்து புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முன்னூர்மங்கலம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் நூலக கட்டட  மறுசீரமைப்பு பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதூர்செங்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் திறந்து வெளி கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மக்கும் குப்பை, மக்கா குப்பை ஆகியவற்றினை பிரித்தெடுக்கும் பணியினையும், மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் முறையினையும், தென்னங்கன்று பதியன் போடும் முறையினையும் மற்றும் மூலிகை கீரை வகைகள் நடவு செய்யும் முறையினையையும் கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார். 

அம்ரித் சேரோவர் திட்டத்தின் கீழ் உண்ணாமலைபாளையம் மற்றும் நாகப்பாடி ஆகிய ஊராட்சிகளில் புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், காரப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணியினையும் நேரில் பார்வையிட்டார். 

அனைத்து பணிகளையும் துரிதமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது அப்பகுதி மக்கள் வீட்டுமனைப்பட்டா, குடிநீர்வசதி, சாலைவசதி, இடுகாடு, கழிவுநீர்கால்வாய், புதிய நீர்த்தேக்கத்தொட்டி, அனைவருக்கும்; வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர். அனைத்து மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்திரவிட்டார். 

மேலும் 100 நாள் திட்டத்தின் கீழ் பணி கோரிய முதியவருக்கு உடனடியாக 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டையை வழங்கிட உத்திரவிட்டார்.

ஆய்வின் போது தாசில்தார் சி.முனுசாமி, உதவி செயற்பொறியாளர் சக்திவேல், ஆணையாளர் எழிலரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ரபியுல்லா, உதவி பொறியாளர்கள் சசிகுமார், சௌந்தர்ராஜன், வெற்றிவேலன், பணி மேற்பார்வையாளர்கள் பாஸ்கரன், வாசு, ராதிகா, செ.அகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதா ராஜசேகரன், வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், ஊராட்சி செயலாளர் எஸ்.இளங்கோவன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!