கேன்சர் நோயால் அவதிப்படும் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பக்தர் ஒருவர் கலெக்டரிடம் மருத்துவ உதவி கேட்டுள்ளார்.
தீபத் திருநாளைக் கண்டு வழிபடாமல் இறப்பது என்பது பேரிழப்பு என்பதை விளக்கிடும் வண்ணம் கார்த்திகை நாள், விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’ என்று திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடியதிலிருந்து கார்த்திகைத் திருநாள் மிகப் பழமை வாய்ந்தது என்பது தெரிய வரும்.
ஆகவே, மக்கள் பெரும்பாலோர் தீபத் திருநாளைக் காணத் திருவண்ணாமலையை நாடி வருவது வழக்கமாக உள்ளது. துறவிகள் கூடுவதற்கும், சமயப் பணி பற்றி உரையாடுவதற்கும் திருவண்ணாமலை ஒரு களமாக விளங்கியது. இதனால்தான் ‘ஆண்டிகள் மிகுந்தது அண்ணாமலை’ என்று திருவண்ணாமலையை குறிப்பிடுவர். மலையே சிவனாக எண்ணி லட்சக்கணக்கானோர் கிரிவலம் வருகின்றனர். வெளிநாட்டு பக்தர்களும் அண்ணாமலையாரை வணங்கி கிரிவலம் செல்கின்றனர்.
சித்தர்கள், ஞானிகள், யோகிகள், சன்னியாசிகள் இருக்கும் இடமாக திருவண்ணாமலை கிரிவலப்பாதை விளங்கி வருகிறது. சித்தர்கள் பலரின் ஜீவசமாதிகள் அமைந்த இடமாகவும் கருதப்படுகிறது. இன்றைக்கும் பல சித்தர்கள் வாழ்ந்து வருகின்றனர். காவி உடை அணிந்த சாமியார்கள், பக்தர்கள் தரும் அன்னதானத்தை உண்டு கிரிவலப்பாதையில் பல ஆண்டுகளாக தங்கியிருக்கின்றனர்.
அண்ணாமலையார் மீதுள்ள ஈர்ப்பால் லண்டனைச் சேர்ந்த கிளைவ் நியூமென் என்பவரும், 30 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து இவர்களோடு தங்கி விட்டார். தனது பெயரை காளிபாபா என மாற்றிக் கொண்ட அவர் தினமும் காலையிலும், மாலையிலும் சைக்கிளில் கிரிவலம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். நண்பர்கள், பக்தர்கள் உதவியால் தங்கி, உண்டு வந்த கிளைவ் நியூமென்னுக்கு தற்போது 83 வயதாகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த அவர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். பராமரிப்பின்றி இன்றியும், உதவிக்கு ஆட்கள் இன்றியும் அவதிப்பட்டு வரும் அவர் கிரிவலப்பாதையிலே தங்கி, அன்னதானத்தை உண்டு வாழ்ந்து வருகிறார்.
பிரைன் கேன்சரின் தாக்கம் அதிகரித்ததால், மருத்துவ உதவி கேட்டு கிளைவ் நியூமென் என்கிற காளிபாபா திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அவரை, அவரது நண்பர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சுதனும், சமூக சேவகர் மணிமாறனும் அழைத்து வந்திருந்தனர். கலெக்டர் அலுவலக படியில் உட்கார்ந்திருந்த கிளைவ் நியூமென்னை உதவி கலெக்டர் சந்தித்து கோரிக்கையை கேட்டறிந்தார். பிறகு அவரை தற்காலிகமாக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
இது பற்றி சமூக சேவகர் மணிமாறன் கூறுகையில், இங்கிலாந்திலிருந்து வந்த இவர் 2013ம் ஆண்டிலிருந்து பிரைன் கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரிடம் பாஸ்போர்ட், விசா ஏதும் இல்லை. கிரிவலப்பாதையிலே ரோட்டில் படுத்தும், பக்தர்கள் தரும் உணவை உண்டும் வாழ்ந்து வருகிறார். பிரைன் கேன்சரால் முகத்தின் ஒரு பக்கம் அரிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ சிகிச்சை கேட்டு வந்திருக்கிறோம் என்றார்.