ஸ்ரீமதி மரணத்தில் உள்ள மர்மத்திற்கு விடை காண சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அகமுடையார் சங்கங்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை பெருங்குடியில் உள்ள துரியா ஓட்டலில் அகமுடையார் சங்கங்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நேற்று (26ந் தேதி) நடைபெற்றது.
இதில் ஆந்திர மாநில முதலியார் நல வாரிய தலைவர் புல்லட் சுரேஷ், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ், அகில இந்திய அகமுடையார் மகாசபையின் தலைவர் கரு.ரஜினிகாந்த், தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஸ்ரீபதி செந்தில், தலைமை அகமுடையார் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் மு.ராமச்சந்திரன்,மூத்த தலைவர் செல்லப்பா, மருது சேனை பொதுச் செயலாளர் பாலமுருகன், அகமுடையர் அரண் பாலமுருகன், திருக்கோயிலூர் அகமுடையார் சங்கம் டி.கே.டி. முரளி, திருவண்ணாமலை வழக்கறிஞர் தனஞ்செயன், தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இமயன் மற்றும் பல மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக்கு பிறகு கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.தமிழ்நாட்டில் சாதி, மொழி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட தமிழக அரசு ஆவண செய்திடல் வேண்டும்.
2. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உள்ள மர்மத்திற்கு விடை காணவும், உரிய நீதி கிடைக்கவும் சி.பி.ஐ விசாரணைக்கு பரித்திரைக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வது. ஸ்ரீமதியின் தாயாருக்கு அரசுப் பணியும், கருணைத் தொகையாக ரூ.1கோடியும் தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
3.மாமன்னர் மருதுபாண்டியர் முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனம் வெளியிட்டு, முன்னெடுத்த தென்னாட்டு புரட்சியே ஒருங்கிணைக்கப் பெற்ற முதல் இந்திய சுதந்திரப் போர் என மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்து இந்திய வரலாற்று பாடநூல்களில் சேர்த்திடவும். தேசத்தின் தலைநகர் புதுதில்லியில் அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளை நிறுவிட மத்திய அரசையும் வலியுறுத்துகிறோம்.
4. அகமுடையார் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம், திமுக ஆட்சியில் தவிர்க்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியதாகும். தமிழக அமைச்சரவையில் அகமுடையார் சமூகத்திற்கு, சமூக நீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
5. தமிழக அரசால் நியமிக்கப்படும் பதவிகளான தமிழ்நாடு அரசு தேர்வாணைக்குழு, தகவல் ஆணைக்குழு, பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் நியமனங்களில் அகமுடையார் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டுமென வலியுறுத்துவது.
6. மக்களோடு நேரடியான தொடர்பு கொண்ட பதவிகளான மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் அகமுடையார் சமுதாய அதிகாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தகுதி, திறமை இருந்தும் அதிகாரமில்லா பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு, அகமுடையார் சமுதாய அதிகாரிகளின் தகுதி திறமையை அங்கீகரித்து உரிய பதவிகளை வழங்கிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
7. வள்ளல் பச்சையப்ப முதலியார் அறக்கட்டளையால், சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் தனியார் கல்லூரியான பச்சையப்பன் கல்லூரியின் மூலம் பல ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்றுள்ளனர். அந்த கல்லூரி பல அறிவுஜீவிகளை இந்நாட்டிற்கு தந்துள்ளது. இந்த கல்வி சேவையை போற்றும் முகமாக, வள்ளல் பச்சையப்ப முதலியாருக்கு சென்னையில் மணிமண்டபத்தோடு முழுவுருவச்சிலை அமைத்து அவரின் புகழை சிறப்பிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துவது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.