பொதுமக்கள், பக்தர்கள் எதிர்ப்பின் காரணமாக திருவண்ணாமலை நகராட்சி கட்டண கழிப்பிடங்கள் மீண்டும் இலவச கழிப்பிடங்களாக மாற்றப்பட உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக திருவண்ணாமலை நகரம் விளங்கி வருகிறது. இது மட்டுமன்றி ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலத்திற்கும் வந்து செல்கின்றனர். மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். கார்த்திகை தீபத்தை தரிசிக்க 25 லட்சம் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
பக்தர்களுக்கும் அடிப்படை வசதிகளை நகராட்சியும், ஊராட்சியும் செய்து தருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் திருவண்ணாமலை நகரிலும், கிரிவலப்பாதையிலும் உள்ள கட்டண கழிப்பிடங்களை இலவச கழிப்பிடங்களாக மாற்றி அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி உத்தரவிட்டார். உத்தரவை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என நேரில் சென்று சோதனையும் செய்தார். பவுர்ணமி தினத்தில் பக்தர்களோடு பக்தராக அவர் கிரிவலப்பாதையில் உள்ள கழிப்பிடத்திற்கு சென்ற போது அவரிடமே கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் ஊராட்சி செயலாளர்கள் 4 பேர் மீது நடவடிக்கை எடுத்த சம்பவமும் நடைபெற்றது.
இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் திருவண்ணாமலை நகராட்சியை திமுக கைப்பற்றியது. இதையடுத்து திருவண்ணாமலை நகரில் உள்ள 15 இலவச கழிப்பிடங்கள், கட்டண கழிப்பிடங்களாக மாற்றம் செய்து நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் பக்தர்களும், பொதுமக்களும் அதர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்கவே ரூ.10 வசூலிக்கப்பட்டது. கழிப்பிடங்களை பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த நகரமன்ற உறுப்பினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு நாளைக்கு கழிப்பிடத்திற்கு 5 முறை சென்றாலே 50 ரூபாய் காலியாகி விடுகிறது. கூலி வேலை செய்து நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 50 ரூபாய் தர முடியுமா? என தொழிலாளர்கள் புலம்பித்தள்ளினர். இதனால் ஜோதி மார்க்கெட்டில் உள்ள பூ வியாபாரிகளுக்கும், கட்டண கழிப்பிட ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கட்டண கழிப்பிடத்தை இலவச கழிப்பிடமாக மாற்றக் கோரி வியாபாரிகள் சங்கம் சார்பில் அமைச்சர் எ.வ.வேலுவிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனாலும் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களிடம், கழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இலவச கழிப்பிடங்கள் சரியாக பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவியது. எனவேதான் கட்டண கழிப்பிடங்களாக மாற்றப்பட்டன என நகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும் இதை ஏற்காத எதிர்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. திருவண்ணாமலை நகர பேருந்து நிலையத்தில் கழிப்பறை பயன்படுத்த 10 ரூபாய் வசூலிக்கும் பகல் கொள்ளையை கண்டித்தும், இலவச கழிப்பறையை சுத்தமாக வைத்து தொடர்ந்து இலவசமாக பயன்படுத்திட ஏற்பாடு செய்திடவும் நகராட்சியை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாஜகவின் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் சார்பிலும் பக்தர்களின் நலன் கருதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு கடிதம் ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 15 பொது கழிப்பிடங்கள் கட்டண கழிப்பிடங்களாக உள்ளன. இக்கழிப்பிடங்கள் குறித்து கூடுதல் கட்டணம் வசூல் செய்தல் தேவையற்றது. திருவண்ணாமலை நகரம் கோவில் நகரமாக இருப்பதாலும், பௌர்ணமி மற்றும் சித்ரா பௌர்ணமி நாட்களில் சுமார் 8 இலட்சம் முதல் 10 இலட்சம் வரை ஆன்மீக பக்தர்கள் வந்து செல்கின்றனர், மேலும், வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் அதிகளவில் வருகை தருகின்றனர்.
எனவே, பொது மக்களின் அடிப்படை தேவையான கழிப்பறை வசதியினை நகராட்சியின் அனைத்து கழிப்பிடங்களையும் பொது மக்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. திருவண்ணாமலை நகராட்சியால் பராமரிக்கப்படும் கீழ்கண்ட இடங்களில் அமைந்துள்ள கட்டணக் கழிப்பிடங்களை இலவச கழிப்பிடங்களாக மாற்ற வேண்டும்.
1) மத்திய பேருந்து நிலைய உட்புறத்தில் உள்ள நவீன கட்டண கழிப்பறை,
2) ஜோதி மார்கெட் நவீன கட்டண கழிப்பறை
3) திருவள்ளுர் தெருவிற்கும் திருவூடல் தெருவிற்கும் இடையில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை
4) ஈசான்யம் பகுதி தற்காலிக பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கட்டண கழிப்பறை
5) செங்கம் ரோடு மாட்டுப்பட்டி சந்தைமேடு தற்காலிக பேருந்து நிலைய கட்டண கழிப்பறை
6) ஈசான்யம் மைதானம் தெற்கு (கிறிஸ்துவர் கல்லறை அருகில்)
7) போளூர் சாலை (அர்பனா ஓட்டல் எதிரில்)
8) மத்திய பேருந்து நிலையம் (பழைய கழிப்பிடம்)
9) மத்திய பேருந்து நிலையம் (பயணியர் கழிப்பிடம்-2)
10) தென்ஒத்தவாடைத் தெரு (திருமஞ்சன கோபுரம் அருகில்)
11) துராபலித் தெரு (காந்தி நகர் மைதானம் வடக்கு பகுதி)
12) துராபலித் தெரு (காந்தி நகர் மைதானம் தெற்கு பகுதி)
13) வேட்டவலம் சாலை (லெபனான் பங்களா)
14) தாமரைக் குளம்
15) லட்சுமிபுரம் (பழைய நீதிமன்றக் கட்டடம் அருகில்)
மேற்கண்ட 15 கழிப்பிடங்களை அப்பகுதி தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நல்ல முறையில் சுகாதாரமாக பராமரிப்பு செய்வது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உரிய முடிவு எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, திருவண்ணாமலை நகராட்சியில் மேற்கண்ட கட்டண கழிப்பிடங்களை, இலவச கழிப்பிடங்களாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
நகரமன்ற கூட்டத்தில் இலவச கழிப்பிடங்களை, கட்டண கழிப்பிடங்களாக மாற்றி தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது போல் மீண்டும் இலவசமாக மாற்ற தீர்மானம் கொண்டு வரலாமே என நகராட்சி அலுவலர்களிடம் கேட்ட போது நகராட்சி நிர்வாகத் துறையிடம் முறையாக அனுமதி பெற்றுதான் கழிப்பிடங்களை இலவசமாக மாற்ற வேண்டும், அதற்காகத்தான் அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார் என்றனர்.