வாலிபாலில் தேசிய அளவில் பங்கு பெற்று தங்கபதக்கத்தை பெற்றுத் தந்த உடற்கல்வி ஆசிரியர் மாற்றப்பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் புறக்கணித்தனர்.
இதனால் மாற்றல் உத்தரவை அதிகாரிகள் ரத்து செய்தனர். இதையடுத்து மகிழ்ச்சி அடைந்த மாணவர்கள் அந்த உடற்கல்வி ஆசிரியரை அலேக்காக பள்ளிக்கு தூக்கி வந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய போது உடற்கல்வி ஆசிரியர் கண்கலங்கினார்.
திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் சொரகொளத்தூரில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பொற்க்குணம், மருத்துவாம்பாடி, கமலபுத்தூர், கருத்துவாம்பாடி, கரிங்கல்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக கணேஷ்பாபு என்பவர் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். அவரை திடீரென பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டனர். இது பற்றி தெரிந்ததும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவியர்கள், உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பாபுவை மாற்றம் செய்யக் கூடாது என பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து “மாற்றாதே, மாற்றாதே உடற்கல்வி ஆசிரியரை மாற்றாதே” என கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போராட்டம் நடத்திய மாணவ-மாணவியர்கள் தெரிவிக்கையில் உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பாபு, விளையாட்டின் நுணுக்கங்களை சொல்லி கொடுத்து எங்களை ஊக்கப்படுத்தி மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல சாதனைகளை செய்ய வைத்திருக்கிறார். எனவே அவரே மீண்டும் உடற்கல்வி ஆசிரியராக தொடர வேண்டும் என்றனர்.
மாணவ-மாணவியர்களின் போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிக்கு விரைந்து சென்ற மாவட்ட கல்வி அலுவலர் அந்தோணிசாமி, பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பாபு மீண்டும் இந்த பள்ளியிலேயே பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் பள்ளிக்கு வரமாட்டோம் என பிடிவாதமாக மாணவ-மாணவியர்கள் கூறிவிட்டனர். சில மாணவிகள் ஆசிரியர் கணேஷ்பாபுவின் காலில் விழந்து பள்ளியை விட்டு போகக்கூடாது என மன்றாடினர்.
இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பாபுவின் மாறுதல் உத்தரவை ரத்து செய்த மாவட்ட கல்வி அலுவலர் அந்தோணிசாமி அவரை மீண்டும் அதே பள்ளியில் பணியாற்றிட உத்தரவிட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர் கணேஷ் பாபுவை கட்டித்தழுவி கண்ணீர் மல்க தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்தனர் இதைப்பார்த்த ஆசிரியர் கணேஷ்பாபுவும், உணர்ச்சி ததும்ப கண்ணீர் சிந்தினார். தான் இதே பள்ளியில் வேலையை தொடருவதாகவும், மாணவ-மாணவிகள் அமைதியாக கலைந்து வகுப்பறைக்கு சென்று படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் மாணவ-மாணவிகள் கலைந்து வகுப்பறைகளுக்கு சென்றனர்.
கணேஷ்பாபு |
உடற்கல்வி ஆசிரியர் கணேஷ்பாபுவின் தந்தை அண்ணாமலை, திருவண்ணாமலை சன்னதி தெருவில் ஸ்ரீவிஜய் ஸ்போர்ட்ஸ் அண்ட் கார்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் ஆசிரியர் கணேஷ்பாபு, விளையாட்டில் ஆர்வமாக உள்ள மாணவ-மாணவியர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். சொரகொளத்தூரில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 14,17,19 வயதினருக்கான வாலிபால் அணிகளை உருவாக்கி பயிற்சிகளை அளித்து வருகிறார். தினமும் மாலை 3-30 மணியிலிருந்து 6மணி வரை விளையாட்டு பயற்சியை அளித்து வருகிறார் மேலும் கோடைகால சிறப்பு முகாம்களையும் நடத்தினார். இதன் காரணமாக விளையாட்டில் அந்த பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு சாதனைகளை செய்துள்ளனர். தமிழக அணியில் பீச் வாலிபால் போட்டியிலும் முத்திரை பதித்தனர்.
வினோதினி என்ற மாணவி, தமிழக அணிக்காக தேசிய அளவிலான போட்டியில் விளையாடிய அணியில் பங்குபெற்றார். அவர் பங்கு பெற்ற அணி தங்கப்பதக்கம் வென்றது. இதே போல் சிநேகா என்ற மாணவி வாலிபால் போட்டியில் தேசிய அளவில் விளையாடி வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் அவருக்கு தமிழக அரசு ரூ.2லட்சத்து 50ஆயிரத்தை பரிசாக தந்து ஊக்கப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மாணவ-மாணவிகளுக்கு டீ ஷர்ட், ஷூ போன்றவற்றை ஆசிரியர் கணேஷ்பாபுவே தனது சொந்த பணத்திலிருந்து வாங்கி கொடுத்து வருகிறார். மேலும் போட்டிகளுக்கு வெளியூர்களுக்கு அழைத்துச் செல்லும் செலவையும் அவரே ஏற்றுக் கொள்வார். இதன் காரணமாகவே அவரது பணி மாற்றத்திற்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவ-மாணவிகளை ஊக்குவித்து விளையாட்டில் சாதனை படைக்க வைத்த ஆசிரியரை மாற்றியது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர், ஒரு மாணவியை லேசாக தட்டி கண்டித்துள்ளார். இதனால் அந்த மாணவிக்கு வலிப்பு வந்துள்ளது. எனவே அந்த உடற்கல்வி ஆசிரியர் சொரகொளத்தூர் பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதன்காரணமாகவே கணேஷ்பாபு, சொரகொளத்தூரிலிருந்து சண்முகா பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டாரே தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தனர்.
உடற்கல்வி ஆசிரியருக்காக மாணவ-மாணவிகள் கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.